புதன், 5 ஜூன், 2024

ஃபைசாபாத் தொகுதியில் தோல்வி

 


ஃபைசாபாத் தொகுதியில் தோல்வி



அயோத்தி ராமர் கோயிலை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.

18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் படிப்படியாக வெற்றி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

பாஜக தலைமையிலான கூட்டணி 291 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், உத்தரப் பிரதேச மாநிலம் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. அயோத்தி கோயிலை முன்னிலைப் படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.

பாஜக வேட்பாளர் லாலு சிங்கை விட 54,567 வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் லாலு சிங்  4,99,722 வாக்குகளையும், சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அயோத்தி கோயில் விழாவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணித்ததாக, மக்கள் மத்தியில் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/bjp-defeat-in-faizabad-constituency-where-ram-temple-is-located.html