நிலச்சரிவில் சிக்கிய கிராமங்களில் உயிருடன் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக கேரள அரசு வியாழக்கிழமை உறுதிசெய்துள்ளது. கேரளாவில் செவ்வாய்கிழமை நடந்த நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழன் மதியம் வரை மேலும் சில உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 177-ஐ எட்டியுள்ளது. தவிர, அதிகார்ப்பூர்வ தரவுகளின்படி, சுமார் 170 பேர் காணவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட 177 இறப்புகளில், 81 ஆண்கள், 70 பெண்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் குழந்தைகள். இதுவரை 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளைத் தவிர, மீட்புப் பணியாளர்கள் 92 உடல் உறுப்புகளை, முக்கியமாக மலப்புரத்தின் நிலம்பூர் பகுதியில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர். உடல் உறுப்புகள் உட்பட 252 பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வயநாட்டில் கல்பட்டாவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 3 நாட்களில் உயிருடன் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை கிராமங்களில் மீட்பதற்கு யாருமில்லை என்று கருதப்படுகிறது. யாராவது தனித்தனியாக சிக்கிக் கொண்டார்களா என மீட்புப் பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் இருந்து உடல்களை மீட்பதுதான் பாக்கி என்றார்.
பினராயி விஜயன் கூறுகையில், இப்பகுதியில் உள்ள முண்டக்கை அரசு ஆரம்பப் பள்ளி மற்றும் சூரல்மலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் 29 பள்ளிக் குழந்தைகள் காணவில்லை என்று கூறினார்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதைச் சுட்டிக்காட்டி, நிலச்சரிவில் 348 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று பினராயி விஜயன் கூறினார்.
அடையாளம் தெரியாத உடல்களை தகனம் செய்ய/புதைக்க ஒரு நெறிமுறை தயாராக உள்ளது. அவற்றை பாதுகாத்து வைப்பதற்கு கூடுதல் ஃபிரீஸர்கள் தேவைப்படுவதால், தேவையானவற்றை அனுப்ப கர்நாடக அரசு தயாராக உள்ளது.
முண்டக்கை கிராமத்தை அடைய பெய்லி பாலம் கட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ள சூரல்மலையையும் பினராயி விஜயன் பார்வையிட்டார். அங்கு ஏராளமான உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
source https://tamil.indianexpress.com/india/kerala-cm-pinarayi-vijayan-says-nobody-left-to-be-saved-death-toll-likely-to-cross-300-in-landslide-6793219