வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது”

 

உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பஞ்சாப் அரசு சட்டம் கொண்டு வந்தது. அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாகப் பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 6 நீதிபதிகள் கொண்டகுழு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பஞ்சாப் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும். அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை உள்ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். உள் இட ஒதுக்கீடு தொடர்பான மாநில அரசுகள் பிறப்பித்த சட்டம் செல்லும்  என்றும் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு 3.5 சதவீதமும் பட்டியல் இனத்திற்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு மூன்று சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை முன்மாதிரியாக வைத்துத் தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பட்டியலின மக்களே சிலர் எதிர்த்து வழக்கு தொடுத்தனர்.

இத்தகையச் சூழலில் பஞ்சாப் மாநிலத்தின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் சிறப்பானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைகளை எதிர் கொண்டு வரும் சமூகங்களுக்குச் சம வாய்ப்பை அளிக்க உள் ஒதுக்கீடு வகை செய்கிறது என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. சமூக நீதி வரலாற்றில் இது மிக முக்கியமான தீர்ப்பாகும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/supreme-courts-decision-on-internal-reservation-is-welcome-mamata-chief-jawahirullah.html