ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

பெரியார் குறித்து அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஐகோர்ட்டில் கி.வீரமணி வழக்கு

 

k veeramalsi

தந்தை பெரியார் குறித்து அவதூறு: தொகுதி மறுவரையறை ஆங்கில புத்தகத்திற்கு எதிராக கி.வீரமணி வழக்கு

தொகுதி மறுவரையறை தொடர்பான ஆங்கிலப் புத்தகத்தில் தந்தை பெரியார் குறித்து அவதூறான மற்றும் தவறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, புத்தகத்தின் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்திற்கு எதிராக ரூ.1 கோடியே 1,000 மான நஷ்டஈடு கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த கவுதம் ஆர். தேசிராஜு மற்றும் டெல்லியைச் சேர்ந்த தீக்கித் பட்டாச்சார்யா ஆகியோர் இணைந்து எழுதிய, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 'ப்ளூஒன் இங்க்' (BlueOne Ink) நிறுவனம் வெளியிட்ட ஆங்கிலப் புத்தகம் பாரதத்தின் சிறந்த ஜனநாயகத்துக்கான தொகுதி மறுவரையறை மற்றும் மாநிலங்கள் மறுசீரமைப்பு (Delimitation & Reorganisation of States for Better Indian Democracy). புத்தகத்தில், பிராமணர்களை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதாக முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனச் செயலாளரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரியாரின் பேச்சுகள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து 1981-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டுவது போல, தந்தை பெரியார் ஒருபோதும் கூறாத கருத்துகளை உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் வகையில் புத்தகத்தில் சேர்த்து உள்ளனர். தந்தை பெரியாரைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கும் இந்த அவதூறுக் கருத்துகளைப் புத்தகத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்; அதுவரை புத்தகத்தின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடைவிதிக்க வேண்டும். பெரியாரின் புகழுக்குக் களங்கம் விளைவித்ததற்காக ரூ.1 கோடியே 1,000 மான நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கி.வீரமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனேயே தந்தை பெரியாருக்கு எதிராக இத்தகைய அவதூறுக் கருத்துக்கள் புத்தகத்தில் திட்டமிட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு குறித்து புத்தக எழுத்தாளர்கள் கவுதம் ஆர். தேசிராஜு, தீக்கித் பட்டாச்சார்யா மற்றும் பதிப்பக நிறுவனமான 'ப்ளூஒன் இங்க்' ஆகியோர் வரும் செப்.9-ம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/defamation-suit-against-delimitation-book-k-veeramani-demands-1-crore-compensation-for-periyar-slander-12416054