புதன், 19 ஆகஸ்ட், 2026

ரீல்ஸ் சர்ச்சை பதிவுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அதிரடி

 source https://tamil.indianexpress.com/india/supreme-court-seeks-states-meta-response-over-police-posts-revealing-accused-identities-12393388


காவல்துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் முகங்கள் மற்றும் அடையாளங்களை வெளியிடுவதையும், அவர்களை மனிதத்தன்மையற்ற முறையில் நடத்துவதை காட்டும் வீடியோக்கள் பதிவிடுவதையும் தடைசெய்ய கோரியும், ஏற்கனவே உள்ள அத்தகைய பதிவுகளை உடனடியாக நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் முன்னணி சமூக ஊடக நிறுவனங்களான 'எக்ஸ்' (X), 'மெட்டா' (Meta) ஆகியவற்றுக்கு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் பத்திரிகையாளருமான ஹேமேந்திர படேல் தாக்கல் செய்த இந்த மனு, இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி - வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சில உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே இதுதொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும், இதனை முழுமையாகத் தடுக்க இன்னும் விரிவான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன; மேலும் சமூக ஊடக இடைத்தரகர் நிறுவனங்களும் இதில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று வாதிட்டார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த், இதற்காக ஒரு முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பு (Regulatory regime) இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் பிறப்பித்தார்.

மனிதாபிமானமற்ற உடலளவிலான தாக்குதல்: பல்வேறு மாநிலக் காவல்துறையினர் தங்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடியோக்களைப் பதிவேற்றுகின்றனர். அவற்றில் குற்றவாளிகள் விலங்கிடப்பட்டும், கயிற்றால் கட்டப்பட்டும், லத்தியால் தாக்கப்பட்டும், முழங்காலிட வைக்கப்பட்டும், படிக்கட்டுகளில் இருந்து இழுத்துச் செல்லப்படும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இது ஒரு ஜனநாயக சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அருவருப்பான செயலாகும். 

குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் செல்வது மற்றும் காவல் மரபு மீறிய தாக்குதலுக்குப் பிறகு வலியால் அவர்களால் சரியாக நடக்ககூட முடியாத நிலை வீடியோ வெளியிடுகின்றனர். பெரும்பாலான வீடியோக்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் முகங்கள் மிகத் தெளிவாகக் காட்டப்படுகின்றன. காவல்துறையினர் தங்களை 'ஹீரோ' போலவும், 'மாச்சோ' இமேஜிலும் காட்டிக்கொள்ள இந்த ரீல்ஸ் மற்றும் வீடியோக்களுக்குப் பின்னணி இசையைச் சேர்க்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் ஊடக விசாரணைக்கு (Media trial) இணையானவை. மேலும் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய 'அடையாள அணிவகுப்பு' நடைமுறைகளின் நம்பகத்தன்மையை இது முற்றிலும் பாதிக்கிறது.

குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் & ஹரியானா, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தன. ஆனால், இதுவரை அத்தகைய நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

காவல்துறை அமைப்புகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் முகம்/அடையாளங்கள் வெளிப்படுத்துவதையோ அல்லது அவர்களைக் கொடூரமாக நடத்துவதைக் காட்டும் பதிவுகளைப் பதிவேற்றுவதைத் தடுக்கவும் அனைத்து மாநில அரசுகளும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

X மற்றும் Meta நிறுவனங்களுக்கு உத்தரவு: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் அல்லது மனிதாபிமானமற்ற வன்முறைக் காட்சிகளைக் கொண்ட பதிவுகள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் பதிவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முறையான கொள்கைகளை வகுக்க வேண்டும். மேலும் பயனர்கள் புகார் அளித்தால், அத்தகைய பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வெளிப்படையான மற்றும் முறையான கட்டமைப்பு வசதியை உருவாக்க உத்தரவிட வேண்டும்.