வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்தார்:

 mdmk mla

ராஜினாமா செய்ய வைகோ நிர்ப்பந்தித்தார்: ம.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குற்றச்சாட்டு

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய ம.தி.மு.க தலைமை நிர்ப்பந்தித்ததாகவும், தங்கள் மீது அவதூறு பரப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ள ம.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ராஜேந்திரன் மற்றும் செந்தில்செல்வன் ஆகியோர், இனி திமுக எம்.எல்.ஏ-க்களாகவே தொடரப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க வேட்பாளர்களாக கடையநல்லூர் மற்றும் சீர்காழி ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எங்களை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், உழைத்தவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மே 4 முதல் ஜூன் 15 வரை சட்டமன்றத்தில் தி.மு.க. கொறடா உத்தரவுப்படி செயல்படுமாறு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியிருந்தார். ஆனால், ஜூன் 16 அன்று தமிழக அமைச்சர் ஒருவரைச் சந்தித்த பின் அவரது நிலைப்பாடு மாறியது. எங்களை எம்.எல்.ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்ய சொல்லி அவர் நிர்ப்பந்தித்தார்.

ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்தால் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்றும், அமைச்சர் பதவி கூட பெறலாம் என்றும் எங்களுக்கு ஆசை காட்டப்பட்டது. தொகுதி மக்கள் மற்றும் பொதுநல அமைப்பினரின் அறிவுறுத்தலின்படி நாங்கள் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டோம். இதற்கிடையே, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நாங்கள் விலைபோய்விட்டதாகப் பேட்டியளித்து தொண்டர்கள் மத்தியில் அவதூறு பரப்பினார். 40 ஆண்டுகளாக வைகோவின் பின்னால் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பயணித்த எங்களுக்கு இந்த இழிவான பழிச்சொல் கடும் வேதனையை அளித்தது.

ஆளுங்கட்சியின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமலும், வாக்களித்த மக்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தாமலும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். விலைபோய்விட்டோம் என்ற குற்றச்சாட்டிற்குப் பிறகு மதிமுகவில் தொடர்வதில் அர்த்தமில்லை. எனவே, சின்னஞ் சிறு வயது முதல் நாங்கள் நேசித்த தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்ந்து பணியாற்ற முடிவெடுத்துள்ளோம்.

5.8.2026 அன்று முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். எங்களை அரவணைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னணியினருக்கு மனமார்ந்த நன்றிகள். தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்கவும், திராவிடக் கொள்கைகள் வலிமை பெறவும் களத்தில் சிப்பாய்களாக நின்று கடமையாற்றுவோம் என்று கூறினர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/mlas-accuse-vaiko-of-forcing-them-to-resign-assembly-seats-we-will-continue-as-dmk-mlas-rajendran-and-senthil-selvan-meet-mk-stalin-12233596