ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

எட்டப்பர்கள் யார், முதுகில் குத்தியது யார்? தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்

 

kanimozhi

எட்டப்பர்கள் யார், முதுகில் குத்தியது யார்? தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் - கனிமொழி

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில், தி.மு.க அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் மக்களவை எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது; திராவிட முன்னேற்றக் கழகம் மிகத் தெளிவாக, முதன்முதலில் இந்த தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோதே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஐந்து மாநில முதல்வர்களை ஒன்றிணைத்து சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட சில முதலமைச்சர்கள் கலந்துகொண்டு, அந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கவில்லை; நியாயமான தொகுதி மறுவரையறை என்பதுதான் அதில் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது.

தேர்தல் நேரத்தில் தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டபோது, எங்களுக்குத் தேர்தல் முக்கியமில்லை, தமிழ்நாட்டின் உரிமைகள்தான் முக்கியம் என தி.மு.க தலைவர் கூறினார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களிடம் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் தி.மு.க தலைவர் உத்தரவிட்டார். கடந்த காலத்தில் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, தி.மு.க.வால் ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களை எடுத்து கூறினோம். நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மசோதாவில், எந்த இடத்திலும் தமிழ்நாட்டிற்கான பங்கு எந்த விதத்திலும் மாறாது என்று குறிப்பிடப்படாமல் இருந்ததால், அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது என நிராகரித்தோம்.

இதுவரையில் மத்திய அரசாங்கம் எங்களை அழைத்து பேசியதாக தகவல் இல்லை; ஒருவேளை ஒருசில நபரிடம் பேசி இருக்கலாம். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தை அழைத்து இந்த மசோதா குறித்து கருத்து கேட்கவில்லை. தற்பொழுது இந்த மசோதா அறிமுகம் செய்யப்படமாட்டாது என்பதுதான் எங்களுக்கு வந்த தகவலாக உள்ளது. மேலும், அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இருக்கும் மசோதா குறித்து எந்தவிதமான தகவலோ அல்லது மசோதாவின் நகலோ எங்களிடம் இல்லை.

மேகதாது விவகாரம் இருக்கும்போது, தமிழகத்தில் எதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்றால் அரசாங்கம் கட்சித் தலைமைக்குதான் கடிதம் எழுத வேண்டும். ஆனால் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட முறையில் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். எங்கள் தி.மு.க தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைமைக்குதான் கடிதம் எழுதினார். எனவே, இதுவே முறையில்லாத ஒன்றாக உள்ளது.

மேகதாது மற்றும் விவசாயிகள் பிரச்னைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அதை திசை திருப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடுதான் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடக் கூடாது என்றுதான் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். யார் எட்டப்பர்கள் என்றும், தேர்தலுக்குப் பின்பு யார் முதுகில் குத்தினார்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மேகதாது விஷயத்தில் ஒருமித்த கருத்தைதான் கொண்டுள்ளோம் என்றார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/people-know-who-the-traitors-are-kanimozhi-hits-back-over-delimitation-mekedatu-row-kanimozhi-explains-why-dmk-boycotted-tn-govts-meeting-on-delimitation-12242986