source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-21-highways-tenders-cancel-after-arappor-iyakkam-irregularities-12455771
/indian-express-tamil/media/media_files/2026/08/30/tamilnadu-arappor-2026-08-30-19-23-06.jpg)
சென்னை நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி (Limited Tender) நடைமுறை மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழகத்தில் ஊழல் எதிர்ப்பு அமைப்பான அறப்போர் இயக்கம், கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, தமிழக அரசு 21 கட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்துள்ளது.
ஒவ்வொரு ஒப்பந்தப்புள்ளியும் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புடையதாகும். இவை திறந்த ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளிகளாக அறிவிக்கப்படாமல், குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளாக வெளியிடப்பட்டிருந்தன. இதனால், ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்பதை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியது.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள தொழில்நுட்ப பணியாளர்களின் நியமனம் உண்மையில் தேவையா என்பதை முதலில் உறுதி செய்த பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு அரசிடம் வலியுறுத்தியது. மேலும் ஏன் கட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்படுகின்றன?” என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை மூலம், துறை பொறியாளர்களுக்கு விருப்பமான ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்கும் சூழல் உருவாகலாம் என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியது. மேலும், சென்னையில் ஏற்கனவே உள்ள தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அறப்போர் இயக்கம் கேள்விக்குட்படுத்தியது. அந்த அமைப்பின் தகவலின்படி, சென்னை நகர சாலைப் பிரிவு-Iல் 9 உதவி பொறியாளர்கள், 4 உதவி கோட்டப் பொறியாளர்கள், 1 கோட்டப் பொறியாளர் மற்றும் 8 வரைவாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல், பிரிவு-IIல் 8 உதவி பொறியாளர்கள், 4 உதவி கோட்டப் பொறியாளர்கள், 1 கோட்டப் பொறியாளர் மற்றும் 8 வரைவாளர்கள் உள்ளனர். இந்தப் பணியிடங்களில் எதுவும் காலியாக இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 43 தொழில்நுட்ப பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 27 பொறியாளர் பணியிடங்களும், 16 வரைவாளர் பணியிடங்களும் அடங்கும். இந்த அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன என்றும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
இந்நிலையில், அறப்போர் இயக்கத்தின் கேள்வியை தொடர்ந்து 21 ஒப்பந்தப்புள்ளிகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதனை வரவேற்றுள்ள அறப்போர் இயக்கம், தமிழக அரசுக்கு நன்றி, அதே சமயம் துறையின் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் திறந்த ஆன்லைன் முறையில் வெளியிடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை கட்டாயமாக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளி சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், முறைகேடுகளுக்கு பொறுப்பானதாகக் கண்டறியப்படும் அரசு ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில், இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.





