திங்கள், 17 ஆகஸ்ட், 2026

கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு; நீதி கேட்டு மைசூருவில் வெடித்த போராட்டம்

 

cavery

எழுதியவர் : கிரண் பராஷர்

சனிக்கிழமை அதிகாலை காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு, சாமராஜநகர் மற்றும் மைசூரில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்றது. இச்சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் சுதந்திரமான விசாரணை, நிதி இழப்பீடு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்றும் அவர்களது இறப்பிற்கு நீதி வேண்டும் என்று கூறி தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரின் மனைவி அளித்த புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகிலுள்ள பழங்குடியினப் பகுதியில் வசித்து வந்த அந்தோணி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42) மற்றும் குமார் சவரிஅப்பன் (35) ஆகியோரின் உயிரிழப்பு குறித்து நீதிபதி விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேருடன் சென்ற ஜோசப் மகிமை தாஸ் (44) காயமடைந்துள்ளர் என்பது குறிப்பிடத் தக்கது.

கொள்ளேகால் சப்- டிவிஷனின் உதவி ஆணையர் தினேஷ் குமார் மீனா கூறியதாவது,  "துணை ஆணையர் ஒரு வாரத்திற்குள் அறிக்கை கேட்டுள்ளார். நாங்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுத் தகவல்களைச் சேகரித்துள்ளோம். காவல்துறை மற்றும் பிற அமைப்புகளின் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.

உயிரிழந்தவர்கள், அப்பகுதிக்கு ரோந்து சென்ற வாகனங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்கள் வனவிலங்கு வேட்டைக்காரர்கள் என்றும், அவர்களிடம் குறைந்தது 2 கிலோ வனவிலங்கு இறைச்சி இருந்ததாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்காப்புக்காகவே நான்கு பேரில் மூன்று பேரை சுட்டு கொன்றதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால், தங்களது கால்நடைகளைத் தேடிச் சென்றபோதே வனத்துறையினர் அவர்களைச் சுட்டுக் கொன்றதாகப் பலியானவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெற்கு மண்டல காவல்துறை தலைமை இயக்குனர்  எம்.பி. பொரலிங்கய்யா பேசியதாவது, உயிரிழந்தவர்கள் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள தோமியாார்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அந்தோணி சாமியின் மனைவி மேரி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறினார்.

மேரி தனது புகாரில், ஆகஸ்ட் 14 அன்று மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் 2 பசுக்கள் திரும்ப வரவில்லை. இதனால் மாலை 6.30 மணியளவில் அந்தோணி மேலும் மூவருடன் பசுக்களைத் தேடிச் சென்றுள்ளார். சனிக்கிழமை காலை 7 மணியளவில் மகிமை தாஸ், மேரியைத் தொடர்புகொண்டு இச்சம்பவத்தைக் கூறியுள்ளார். மகிமை தாஸ் அளித்த தகவலின்படி, அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் எந்தவித தூண்டுதலும் இன்றி வனத்துறையினர் 3 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மேரி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செய்தி அறிந்ததும், கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆத்திரமடைந்த கிராம மக்களும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் சனிக்கிழமை ஹனூரில் உள்ள ஷாக்யா வனச்சரக அலுவலகத்தைச் சூறையாடியதாக கூறப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/india/cauvery-wildlife-sanctuary-forest-officials-booked-for-murder-of-three-12266482