ரேசன் கடையில் கைரேகை பதிவு: இந்த தேதியில் சிறப்பு முகாம்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-to-hold-special-ekyc-camp-at-ration-shops-on-august-29-12433870
/indian-express-tamil/media/media_files/2026/08/02/ration-card-2026-08-02-09-30-13.jpg)
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இ - கே.ஒய்.சி சரிபார்ப்பிற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது இ - கே.ஒய்.சி பதிவை நிறைவு செய்யுமாறு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைவதையும், போலி குடும்ப அட்டைகளைக் களைவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த இ - கே.ஒய்.சி சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைரேகையைப் பதிவு செய்து, பயோமெட்ரிக் முறையில் இந்தச் சரிபார்ப்புத் தரவுகள் புதுப்பிக்கப்படுகின்றன.
இச்சிறப்பு முகாம் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இதுவரை தங்கள் ரேஷன் கடைகளில் இ - கே.ஒய்.சி செய்யாத குடும்ப உறுப்பினர்கள், தங்களின் குடும்ப அட்டையுடன் நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று கைரேகைப் பதிவை மேற்கொண்டு இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இதுவரை 96.21 சதவீதக் குடும்ப அட்டைகளில் இ - கே.ஒய்.சி சரிபார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களையும் விரைவாக உள்ளடக்கி, 100 சதவீத இலக்கை எட்டும் நோக்கத்துடன் இச்சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை இ - கே.ஒய்.சி செய்யாத பொதுமக்கள் இந்தச் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தித் தங்களது பதிவை உடனடியாக முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





