source https://tamil.indianexpress.com/explained/how-india-recruits-government-employees-and-why-so-few-make-it-12434836
/indian-express-tamil/media/media_files/2026/08/26/recruits-government-2026-08-26-08-21-17.jpg)
இந்தியாவில் அரசுப் பணியாளர்கள் தேர்வு முறை எப்படி நடக்கிறது? கோடிக்கணக்கானோரில் மிகச் சிலரே வெல்வது எப்படி?
இந்தியாவில் சர்க்காரி நௌகரி எனப்படும் அரசு வேலை மீதான மோகம் இளைஞர்கள் மத்தியில் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆண்டுதோறும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பணியிடங்களுக்குக் கோடிக்கணக்கான பட்டதாரிகளும், பொறியியல், மருத்துவப் பட்டதாரிகளும் தீவிரமாகப் போட்டியிடுகின்றனர்.
தனியார் துறையில் தரமான வேலைவாய்ப்பு குறைவு, சுயதொழில் தொடங்குவதற்கான போதிய ஆதரவின்மை, அரசுப் பணிகளில் கிடைக்கும் பணிப் பாதுகாப்பு மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவையே இந்த அபரிமிதமான ஈர்ப்புக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. அண்மையில் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள் இந்த வேலை மோகத்தின் தீவிரத்தையே பிரதிபலிக்கின்றன.
அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
அரசுப் பணியிடங்கள் குரூப் 'ஏ', 'பி' மற்றும் 'சி' என 3 முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன (முன்பிருந்த குரூப் 'டி' பிரிவு தற்போது குரூப் 'சி' உடன் இணைக்கப்பட்டுள்ளது). மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினதுறை தரவுகளின்படி, 40 லட்சத்திற்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், மார்ச் 1, 2023 நிலவரப்படி 30.62 லட்சம் நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் (ஒப்பந்த மற்றும் ஆலோசகர் பணியாளர்கள் இதில் சேர்க்கவில்லை). 2023-24 நிதியாண்டில் மத்திய அரசு இவர்களது ஊதியத்திற்காக ரூ.2.95 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இதில் 80%-க்கும் அதிகமான தொகை பாதுகாப்பு, ரயில்வே, அஞ்சல் மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கே செலவாகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் நிர்வாகம், பாதுகாப்புப் படைகள், காவல்துறை, மருத்துவம் மற்றும் ஆசிரியர் பணி என நாடு முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானோர் அரசுப் பணியாளர்களாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணிகள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன?
மத்திய அரசில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் கொள்கைகளை பிரதமரின் கீழ் இயங்கும் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள பணியாளர், பயிற்சித் துறை (DoPT) வகுக்கிறது. யு.பி.எஸ்.சி (UPSC), எஸ்.எஸ்.சி (SSC), ரயில்வே வாரியம், பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் இத்தேர்வுகளை எழுதினாலும், சுமார் 1.20 லட்சம் பேர் மட்டுமே மத்திய அரசுப் பணிகளில் சேர முடிகிறது.
1. யுபிஎஸ்சி (UPSC):
உயர் மற்றும் நடுத்தர அளவிலான குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' அதிகாரிகளைத் (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 19 சிவில் சர்வீசஸ், பாதுகாப்புப் பணிகள்) தேர்வு செய்கிறது. 2022-23-ல் நடந்த 22 தேர்வுகளை 25.70 லட்சம் பேர் எழுதியதில், வெறும் 7,999 பேர் மட்டுமே பணி நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டனர். இத்தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளைக் கொண்டவை.
2. எஸ்எஸ்சி (SSC):
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள கெசட்டட் அல்லாத குரூப் 'பி' மற்றும் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாரா குரூப் 'சி' பணியிடங்களை நிரப்புகிறது. 2024-25-ல் எஸ்எஸ்சி நடத்திய 20 தேர்வுகளில் 2.05 கோடி பேர் பங்கேற்றனர். இதில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) தேர்வை மட்டும் 55.99 லட்சம் பேர் எழுதிய நிலையில், 83,857 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், 2024-ல் எஸ்.எஸ்.சி தேர்வெழுதிய 1.85 கோடி விண்ணப்பதாரர்களில் 1.27 கோடி பேர் பெண்கள், 57.69 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 149 பேர் திருநங்கைகள் ஆவர்.
3. இந்திய ரயில்வே:
12 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட ரயில்வே துறை, மத்திய அரசின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்குநராக உள்ளது. 2014-15 முதல் 2026 ஜூன் வரை அகில இந்திய தேர்வு மூலம் 5.56 லட்சம் பேர் ரயில்வேயில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2024-ல் அறிவிக்கப்பட்ட 92,116 காலிப் பணியிடங்களுக்குக் கணினி வழித் தேர்வுகளை 3.58 கோடி பேர் எழுதினர்.
மாநில அரசுகளின் தேர்வு முறைகள்
மாநிலங்களில் குரூப் 'ஏ', குரூப் 'பி' பணியிடங்கள் (துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்டவை) மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் (State PSCs) மூலம் நிரப்பப்படுகின்றன. பின் இவர்களில் குறிப்பிட்ட தகுதி பெற்றவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் நிலைகளுக்கு பதவி உயர்வு பெறுகின்றனர். ஆண்டுதோறும் அனைத்து மாநில தேர்வாணையங்களும் சேர்த்து 25,000 முதல் 30,000 பேரை மட்டுமே பரிந்துரைக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 16.35 லட்சம் (காவல்துறை உட்பட), தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம், கேரளாவில் 5.50 லட்சம், ஒடிசாவில் 4 லட்சம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் 4.5 லட்சம் அரசுப் பணியாளர்கள் உள்ளனர்.
மாநில அளவிலான குரூப் 'சி', காவலர் பணிகளை மாநில சார்நிலைப் பணியாளர் தேர்வாணையங்கள் மற்றும் காவலர் தேர்வு வாரியங்கள் நடத்துகின்றன. உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் 60,244 காவலர் பணியிடங்களுக்கு 48 லட்சத்திற்கும் அதிகமானோர் (ஒரு இடத்திற்கு 80 பேர்) விண்ணப்பித்திருந்தனர்.
அரசு வேலை மீதான ஈர்ப்புக்குக் காரணம் என்ன?
வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தாலும், இளைஞர்கள் பல ஆண்டுகள் இதற்காகச் செலவிடுவதன் பின்னணியில் பல வலுவான காரணங்கள் உள்ளன. நன்னடத்தைக் காலத்தை நிறைவு செய்த பிறகு, ஓய்வு பெறும் வரை எவ்வித பணி நீக்க அச்சமும் இன்றி நிரந்தர வேலை உத்தரவாதம் கிடைக்கிறது. (கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தனியார் துறையில் ஆட்குறைப்பும் ஊதியப் பிடித்தமும் நடந்தபோது, அரசு ஊழியர்கள் முழு ஊதியம் பெற்றனர்). ஊதியக் குழு பரிந்துரைகளின்படி ஆண்டு ஊதிய உயர்வு, பணவீக்கத்திற்கு ஏற்ப பஞ்சப்படி (DA), பயணச் சலுகை (LTC), மற்றும் வீட்டு வாடகைப்படி. பணிக்கொடை (Gratuity), சேமநல நிதி மற்றும் குடும்பத்திற்கு முழுமையான மருத்துவக் காப்பீடு கிடைக்கிறது. தனியார் துறையைப் போன்று இலக்குகள் (Targets), பணிச்சுமை மற்றும் வார இறுதி வேலை அழுத்தங்கள் இன்றி, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்பளிக்கிறது. இத்தகைய சலுகைகளும், தலைமுறைகளைத் தாண்டிய பொருளாதார மேம்பாடும் சமூக மதிப்பும் இளைஞர்களைத் தொடர்ந்து அரசுத் தேர்வுகளை நோக்கி ஈர்க்கின்றன.





