திங்கள், 24 ஆகஸ்ட், 2026

கணையப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை: மருந்துகளுக்கு பணியாத புரதத்தை வீழ்த்திய ஏ.ஐ தொழில்நுட்பம்

 source https://tamil.indianexpress.com/explained/treatment-for-pancreatic-cancer-how-ai-helped-target-undruggable-protein-12426253


Treatment for pancreatic cancer

கணையப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை: மருந்துகளுக்கு பணியாத புரதத்தை வீழ்த்திய ஏ.ஐ தொழில்நுட்பம்

அமெரிக்காவின் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மாயோ கிளினிக் (Mayo Clinic), பெங்களூருவைச் சேர்ந்த ‘ஸ்ரவதி ஏஐ டெக்னாலஜி’ (Sravathi AI Technology) என்ற ஏ.ஐ நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளது. அறிவுசார் சொத்துரிமைப் பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


கணையப் புற்றுநோய் (Pancreatic Cancer) உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களின் வளர்ச்சிக்குக் காரணமான GIPC1 என்ற குறிப்பிட்ட புரதத்தை இலக்காகக் கொண்டு இந்த சிகிச்சை முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை புகழ்பெற்ற ‘Cell Reports’ அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

மாயோ கிளினிக் நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக புரதம் குறித்து ஆய்வு செய்து வந்தது. வழக்கமான மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத புரதமாக இது கருதப்பட்டு வந்தது. GIPC1 புரதம் தானாக புற்றுநோயை உருவாக்குவதில்லை. ஆனால், உடலின் சிக்னல் அமைப்பில் குறைபாடு ஏற்படும்போது, புற்றுநோய் செல்கள் இந்த புரதத்தின் பாதைகளைப் பயன்படுத்தி மிக வேகமாக வளர்ச்சியடைவதுடன் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவுகின்றன.

கணையப் புற்றுநோய்களில் மிகவும் தீவிரமான 'Pancreatic ductal adenocarcinoma (PDAC)' பாதித்தவர்களின் 5 ஆண்டு உயிர்வாழும் விகிதம் 13.3% க்கும் குறைவாகவே உள்ளது. தாமதமான கண்டறிதல் மற்றும் கீமோதெரபி மருந்துகளுக்கு எதிராக செயல்படும் தன்மை இதற்கு முக்கிய காரணமாகும். இந்த வகை புற்றுநோயில் GIPC1 புரதம் அதிகமாக உற்பத்தியாகி கட்டியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

மருந்து உருவாக்கத்தில் இருந்த சவால் என்ன? ஸ்ரவதி ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பராக் திப்னிஸ் கூறுகையில் GIPC1 புரதத்தின் PDZ பகுதி, மற்ற புரதங்களுடன் பரந்த மற்றும் ஆழமற்ற பரப்பில் தொடர்புகொள்வதால், வழக்கமான மூலக்கூறுகள் இதில் சரியாகப் பிணைவது கடினம். மேலும், இது ஒரு முக்கிய சிக்னல் மையமாக விளங்குவதால், ஒரு பாதையைத் தடுத்தாலும் மற்ற பாதைகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது.

AI மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலக்கூறு (GIPCi): நவீன கணினி மாடலிங், மெஷின் லேர்னிங் மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வு (Predictive Analytics) மூலம், GIPC1 புரதத்தின் PDZ பகுதியைத் துல்லியமாக இலக்கு வைக்கும் 'GIPCi' என்ற சிறிய மூலக்கூறு தடுப்பான் கண்டறியப்பட்டு உள்ளது.

ஸ்ரவதி ஏஐ நிறுவனர் குர்ரம் கிஷன் இதுபற்றி விவரிக்கையில், நாங்கள் சுமார் 40,000 மூலக்கூறுகளுடன் ஆய்வைத் தொடங்கி, படிப்படியாக 5 சாத்தியமான மூலக்கூறுகளாக குறைத்தோம். அவற்றில் 2 மூலக்கூறுகள் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டன. தொடக்க மூலக்கூறுகள் வடிவமைக்க ஜெனரேட்டிவ் ஏ.ஐ உதவியது; அவற்றின் நச்சுத்தன்மை மற்றும் உறிஞ்சும் திறனை ஆய்வு செய்ய முன்கணிப்பு ஏ.ஐ பயன்பட்டது. இறுதியாக குவாண்டம் கெமிஸ்ட்ரி மற்றும் மாலிகுலர் மாடலிங் மூலம் இறுதி மூலக்கூறு உறுதி செய்யப்பட்டது என்றார்.

மனிதப் பயன்பாட்டிற்கு எப்போது வரும்? ஸ்ரவதி ஏ.ஐ நிறுவனம் 2023-ல் இந்த மூலக்கூறைக் கண்டறியும் பணியைத் தொடங்கி 5 மாதங்களில் தனது ஆய்வை முடித்தது. தொடர்ந்து மாயோ கிளினிக் விலங்குகள் மீதான சோதனைகளை மேற்கொண்டது. இந்த சிகிச்சை முறை மனிதப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக உறுதி செய்யப்பட்டால், இன்னும் சுமார் 3 ஆண்டுகளில் இது முழுமையான பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத இலக்குகளுக்கு எதிராக ஏ.ஐ மூலம் புதிய சிகிச்சை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.