source https://tamil.indianexpress.com/india/creamy-layer-centre-asks-supreme-court-to-clarify-its-order-to-consider-claims-of-100-odd-obc-candidates-12429979
/indian-express-tamil/media/media_files/2026/08/04/neet-ug-2026-omr-discrepancy-supreme-court-neet-ug-case-cji-surya-kant-neet-petition-2026-08-04-16-32-00.jpg)
ஓ..பிசி கிரிமிலேயர் சர்ச்சை: 100-க்கும் மேற்பட்ட தேர்வர்களின் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடிய மத்திய அரசு
2016-ம் ஆண்டு முதல் குடிமைப் பணிகள் தேர்வில் (CSE) தேர்ச்சி பெற்றும், 'கிரிமிலேயர்' (Creamy Layer) வரம்பைக் காரணம் காட்டி பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) நிராகரிக்கப்பட்ட சுமார் 100 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) தேர்வர்களின் கோரிக்கை பரிசீலிக்குமாறு கடந்த மார்ச் 11 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தீர்ப்பை செயல்படுத்துவது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களையும் விளக்கங்களையும் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட தேர்வர்களின் ஆவணச் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் குடிமைப் பணிகள் தேர்வு 2025 பிரிவுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்புகள் தொடங்கவிருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வாதம் என்ன?
மத்திய அரசு தனது மனுவில் தெரிவித்துள்ள முக்கிய அம்சங்கள்; CSE-2025 இறுதி முடிவுகள் வெளியான ஐந்து நாட்களுக்குப் பிறகே (மார்ச் 11), கிரிமிலேயர் தொடர்பான தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியான தகுதிப் பட்டியல் மற்றும் பணி ஒதுக்கீட்டில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் பயிற்சி அட்டவணை, பயிற்சி மையங்களின் இடவசதி, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான கேடர் ஒதுக்கீடு, மற்றும் தேர்வர்களின் பணிமூப்பு (Seniority), ஊதிய நிர்ணயம் ஆகியவற்றில் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்புகள் (Cascading effect) ஏற்படுத்தும்.
ஏற்கனவே முடிவடைந்த CSE-2025 தேர்வு நடைமுறைக்கு இந்தத் தீர்ப்பை எந்தவித நிபந்தனையுமின்றி முன்தேதியிட்டு (Retrospective effect) அமல்படுத்தினால், அது அதே தேர்வுப் பிரிவைச் சேர்ந்த தேர்வர்களிடையே தீவிரமான முரண்பாடுகளையும் பாகுபாடுகளையும் உருவாக்கும். இந்த விளக்கம் கோரும் மனுவானது, பணி ஒதுக்கீட்டின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் CSE-2025 தேர்வை மட்டுமே குறிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பின்னணி என்ன?
ஓபிசி கிரிமிலேயர் வரம்பு தொடர்பான செப்.1993-ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ குறிப்பாணையின்படி (OM), ஒருவரின் கிரிமிலேயர் தகுதியை நிர்ணயிக்கும் வருமானக் கணக்கீட்டில் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் ஆகியவை சேர்க்கப்படாது என விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்.14, 2004 அன்று DoPT வெளியிட்ட விளக்கக் குறிப்பில், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் சம்பள வருமானம் கிரிமிலேயர் வரம்பிற்குள் கணக்கிடப்படும் என்று மாற்றப்பட்டது. அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கும், பொதுத்துறை/தனியார் துறை ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் இடையே இது கடுமையான பாகுபாட்டை உருவாக்குவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த 2004-ம் ஆண்டின் விதிமுறை CSE-2015 (2016 பேட்ச்) முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதனால், தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களை வைத்திருந்தும், யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் சுமார் 100 ஓபிசி தேர்வர்களின் வாய்ப்பு DoPT-யால் நிராகரிக்கப்பட்டது. இதில், சிலர் யு.பி.எஸ்.சி மற்றும் பிற மாநிலத் தேர்வாணையங்கள் நடத்திய பிற தேர்வுகளில் ஓபிசி பிரிவின் கீழ் தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், குடிமைப் பணிகள் தேர்வில் நிராகரிக்கப்பட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் மார்ச் 11 தீர்ப்பு
பாதிக்கப்பட்ட ரோஹித் நாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் 11 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. ஓபிசி பிரிவினரிடையே கிரிமிலேயரை நிர்ணயிப்பதற்கு வருமானம் மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க முடியாது. சமூக ரீதியாக ஒரே நிலையில் உள்ள ஓபிசி பிரிவினரிடையே செயற்கையான வேறுபாடுகளை உருவாக்குவது சட்டரீதியாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் தவறானது.
பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் பதவிகளை (Group A, B, C, D) கணக்கில் கொள்ளாமல், வெறும் சம்பள வருமானத்தை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது அரசியலமைப்புச் சட்டம் 14, 15 மற்றும் 16-ன் கீழ் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது. இத்தீர்ப்பை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அளித்த 6 மாத காலக்கெடு வரும் செப்.11-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மார்ச் 11 தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டால், எதிர்காலத் தேர்வர்கள் மட்டுமின்றி, கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட தேர்வர்களும் பயனடைவார்கள்; சிலரின் தரவரிசை (Rank) மாற்றியமைக்கப்படலாம். அதேவேளையில், உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே முடிவடைந்த சேர்க்கைகள், முடிக்கப்பட்ட கல்வி அமர்வுகள், வழங்கப்பட்ட பட்டங்கள் அல்லது மாணவர்களின் உறுதிசெய்யப்பட்ட உரிமைகளை பாதிக்கும் வகையில் இத்தீர்ப்பை முன்தேதியிட்டுப் பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு தனது மனுவில் தெளிவுபடுத்தக் கோரியுள்ளது.





