/indian-express-tamil/media/media_files/2026/08/06/brij-bhush-2026-08-06-04-48-28.jpg)
மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து, புதுடெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தால் முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை, புதுடெல்லியில் அவரது ஆதரவாளர்கள் பூமாலைகள் அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். Photograph: (ஏ.என்.ஐ)
எழுதியவர்: லால்மணி வர்மா
ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டைச் சுமத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் பா.ஜ.க எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது, கிழக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் செல்வாக்குமிக்க தலைவர் பா.ஜ.க-வின் கீழ் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவதற்கான வழியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நொய்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “சினேக் மிலன்” நிகழ்ச்சியில், பிரிஜ் பூஷன் மற்றும் அவரது இரு மகன்களான கைசர்கஞ்ச் எம்பி கரண் பூஷன் சிங், கோண்டா எம்.எல்.ஏ பிரதீக் பூஷன் சிங் ஆகியோர் இடம்பெற்ற சுவரொட்டிகளில், "சத்தியமே வென்றது" என்ற முழக்கம் இடம்பெற்றிருந்தது.
பிரிஜ் பூஷன் பின்னர் புதுடெல்லியிலிருந்து பிருந்தாவனத்திற்கு "சத்யமேவ ஜெயதே" என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் புறப்பட்டுச் சென்றார். ஆகஸ்ட் 7 அன்று கோண்டா மாவட்டத்தின் நந்தினி நகர் பகுதியில் அதே பெயரில் ஒரு பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு முன்னாள் எம்பி தனது அரசியல் பலத்தைக் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்களுடன் உத்தரப்பிரதேசம் முழுவதிலுமிருந்து ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2024-ல் அவருக்கு பா.ஜ.க சீட் மறுக்கப்பட்டது. இப்போது நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளதால், அவர் சட்டரீதியாகச் சிக்கல்களிலிருந்து விடுபட்டுள்ளார், மேலும் தனது மகனுக்குப் பதிலாக 2029 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சீட்டைக் கோரக்கூடும். கட்சியும் அவரை மீண்டும் களமிறக்குவதிலோ அல்லது வேறு இடங்களில் பிரச்சாரத்திற்கு அனுப்புவதிலோ பெரிய தயக்கம் காட்டாது” என்று மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார். மேலும், 2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது பிரிஜ் பூஷனின் பரிந்துரைகளையும் கட்சி கருத்தில் கொள்ளக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள், சமீபத்திய ஆண்டுகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றைச் தூண்டின. 2023 ஆம் ஆண்டில், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் வெற்றியாளர்கள் உட்பட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் சிலர் டெல்லியில் பல மாதங்கள் போராட்டம் நடத்தி, அவரைக் கைது செய்யவும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து நீக்கவும் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம் நாடு தழுவிய கவனத்தைப் பெற்றதுடன், பா.ஜ.க-விற்குத் தொடர்ச்சியான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்தது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு, டெல்லி காவல்துறை அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
‘நிச்சயம் போட்டியிடுவார்’
பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறுகையில், முன்னாள் எம்பி 2029 மக்களவைத் தேர்தலில் களமிறங்குவார் என்றார். “அவர் நிச்சயம் 2029 தேர்தலில் போட்டியிடுவார். இறுதி முடிவை பா.ஜ.க மத்திய தலைமைதான் எடுக்கும். அரசியல்ரீதியாக, அவரது விடுதலக்குப் பிறகு அவரது நிலைமை மேலும் வலுவடைந்துள்ளது. பா.ஜ.க-வில் உள்ள அனைவரும் அவர் குற்றமற்றவர் என்றே நம்பினர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மட்டுமே நாங்கள் காத்திருந்தோம்” என்று அவர் கூறினார்.
மற்றொரு மூத்த பா.ஜ.க தலைவர், “கைசர்கஞ்ச் மற்றும் அதை ஒட்டியுள்ள உ.பி-யின் ஷ்ரவஸ்தி, பஸ்தி மற்றும் அயோத்தி போன்ற மக்களவைத் தொகுதிகளில் பிரிஜ் பூஷன் தொடர்ந்து கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளார். அவரைப் புறக்கணிக்க முடியாது” என்றார்.
பா.ஜ.க சார்பில் ஐந்து முறையும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) சார்பில் ஒரு முறையும் என ஆறு முறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
இருப்பினும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் நாடு தழுவிய விமர்சனங்களைத் தூண்டியதைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பா.ஜ.க இவருக்குப் பதிலாக இவரது இளைய மகன் கரண் பூஷன் சிங்கை நிறுத்தியது. கரண் தனது முதல் தேர்தலில் 1.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019-இல், பிரிஜ் பூஷன் இத்தொகுதியை 2.61 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தக்கவைத்திருந்தார்.
பா.ஜ.க இவரது மகனைக் களமிறக்கிய போதிலும், இக்குற்றச்சாட்டுகள் தேர்தலின் போது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையால் பிரிஜ் பூஷனிடமிருந்து விலகியே இருந்தது. கைசர்கஞ்சைத் தவிர வெளித் தொகுதிகளில் பிரச்சாரத்திற்காக அவர் பயன்படுத்தப்படவில்லை.
2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரிஜ் பூஷன் தனது மகனுக்காக மட்டுமே வாக்கு சேகரித்தார். தான் "சிக்கலில்" இருப்பதாகவும், கரணின் வெற்றி தனது அரசியல் வாழ்க்கையை முடிக்க முயல்பவர்களின் "கன்னத்தில் விழும் அறை" என்றும் வாக்காளர்களிடம் அவர் தொடர்ந்து கூறி வந்தார். குறிப்பிடத்தக்க வகையில், கரணுக்காக எந்தவொரு முக்கிய பா.ஜ.க மத்திய தலைவரும் பிரச்சாரம் செய்யவில்லை.
செல்வாக்குமிக்க தலைவராக இருந்தபோதிலும், குற்றச்சாட்டுகள் வெளிவந்ததிலிருந்து பிரிஜ் பூஷன் அமைப்பின் கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பெரும்பாலும் விலக்கி வைக்கப்பட்டதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி, பிரிஜ் பூஷன் இனி எம்.பி இல்லை என்று கூறினர். "அவரது இரண்டு மகன்களில் ஒருவர் எம்.பி, மற்றொருவர் எம்.எல்.ஏ என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது" என்று ஒரு கட்சித் தலைவர் கூறினார்.
முன்னாள் எம்.பி-யாக இல்லாதபோதும், குறைதீர்க்கும் நடவடிக்கைகளுக்கு உதவி கோரி உள்ளூர் பா.ஜ.க தொண்டர்கள் பிரிஜ் பூஷனையே தொடர்ந்து அணுகி வருவதாகவும், அவர் தொடர்ந்து எளிதில் சந்திக்கக்கூடியவராகவே இருக்கிறார் என்றும் மற்றொரு தலைவர் கூறினார்.
2022 சட்டமன்றத் தேர்தல் மற்றும் முந்தைய தேர்தல்களில், பிரிஜ் பூஷன் கிழக்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் பா.ஜ.க வேட்பாளர்களுக்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.
டிசம்பர் 2023-ல் இவரது ஆதரவாளர் சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரிஜ் பூஷன்: “செல்வாக்கு இருக்கிறது, செல்வாக்கு தொடரும். இதை இறைவன் நமக்குக் கொடுத்துள்ளான்” என்று பிரகடனப்படுத்தியிருந்தார்.
source https://tamil.indianexpress.com/india/brij-bhushan-sharan-singh-acquitted-bjp-comeback-gonda-rally-12233830





