source https://tamil.indianexpress.com/tamilnadu/tnstc-north-indian-firm-contract-trichy-bus-workers-protest-12400486
/indian-express-tamil/media/media_files/2026/08/21/tnstc-north-indian-firm-contract-trichy-bus-workers-protest-2026-08-21-00-28-30.jpg)
அரசுப் பேருந்துகளில் வட மாநில நிறுவனம்: ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி பிரம்மாண்ட போராட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குவதற்காக வட மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதைக் கண்டித்து, திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு ஒப்பந்த நகலைக் கிழித்து எறிந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களாக நியமிக்கும் முயற்சியாக அமையும் என்றும், இதனை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/08/21/whatsapp-image-2026-2026-08-21-00-27-00.jpeg)
இந்நிலையில், இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி தில்லை நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான போக்குவரத்து ஊழியர்களும், உள்ளூர் இளைஞர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தனியார் நிறுவனத்துடன் அரசு போட்ட ஒப்பந்த நகலை பகிரங்கமாகக் கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/08/21/whatsapp-image-2026-2026-08-21-00-27-36.jpeg)
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய நிர்வாகிகள், "தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது. வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வழங்காமல், வட மாநிலத்தவரைப் பணியமர்த்துவது நியாயமற்றது" என்று குற்றம் சாட்டினர்.
மேலும், போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளையும், வட மாநிலத்தவர் நியமனத்தையும் முற்றிலுமாக கைவிட்டு, தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பில் முழு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
க.சண்முகவடிவேல்
21 08 2026





