/indian-express-tamil/media/media_files/2026/08/10/sp-velumani-3-2026-08-10-02-45-10.jpg)
கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.
கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செ.ம. வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வேலுச்சாமி அண்ணன் தனக்கு பொறுப்பு வழங்கியது பற்றி வருத்தப்பட வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் தனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை தலைமைக்கும் எங்களுக்கும் பொதுச்செயலாளருக்கும் எங்களுக்கும் தான் பிரச்சனை அதுவும் ஆரோக்கியமான பிரச்னை என்று தெரிவித்தார்.
வேலுச்சாமிக்காக பணியாற்றியவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்றார். கோவை செம்மொழி மாநாடு நடக்கும்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் நடத்திய போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது என்று சுட்டிக்காட்டினார்.
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும்பொழுது வேலுச்சாமி கோவை மாவட்ட பொறுப்பில் பணியாற்றினார் என்றும் நான் பொள்ளாச்சியில் பணியாற்றினேன் என்றும் ஆனால் அப்போது ஜெயலலிதா என்னை அழைத்து கோவைக்கும் சேர்த்து என்னையே பார்த்துக் கொள்ளும்படி கூறினார்கள். அப்போதே அது பற்றி வேலுசாமியிடம் நான் பேசியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்கும் முதலமைச்சர் ஆக்குவதற்கும் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றினோம் என்று கூறிய அவர் தற்போது எங்களது கோரிக்கைகளைத்தான் பொதுச் செயலாளரிடம் முன்வைக்கிறோம் என்று கூறினார். கட்சி முக்கியம் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதே சமயம் எதிர்க்கட்சியாக இருந்த இந்த கட்சி ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை? அதனை பற்றி பேசுவதற்காக தான் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தார்.
முதல் முதலில் பிரச்னை எங்கு வருகிறது என்றால் தி.மு.க-வுடன் அ.தி.மு.க. செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும்போது தான் பிரச்னை வருகிறது என்றும் எங்களை த.வெ.க-வுக்கு ஆதரவு ஓட்டு போட்ட துரோகி என்று கூறுகிறார்கள். தி.மு.க எதிர்ப்பு என்ற வகையில் தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டு போட்டோம் என்றும் ஆனால் கட்சியை விட்டு நாங்கள் செல்லவில்லை என்றும் தெரிவித்தார். அதன் பிறகு பொதுச் செயலாளருடன் இணைந்து தான் பணியாற்றி வருவதாகவும் அதில் சில பதவிகளை கொடுக்கும்போது தான் கருத்து வேறுபாடுகள் வந்ததாகவும் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ளூரில் எங்களுக்கு பிரச்னை இல்லை. உரிமையுடன் தலைமையிடம் போராடி வருவதாகத் தெரிவித்தார்.
பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான வேலைகளை செய்தார். அப்போது கூட அ.தி.மு.க. ஐடி விங்கிடம் அவரைப் பற்றியும் அவரது மகன் பற்றியும் எதுவும் விமர்சிக்க கூடாது என்று தெரிவித்திருக்கிறேன் என்றும் கூறினார். பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது பிரச்னை வரும்போது நாங்கள்தான் மகளிர் உடன் சென்று போராட்டம் செய்தோம் நாம் வளர்த்த பையன் தவறாக செல்ல மாட்டான் என்று நினைத்தோம். ஆனால், அந்தப் பையன் தவறாக செல்ல வேண்டிய சூழ்நிலை. அதைப் பற்றி நான் எடப்பாடி பழனிச்சாமி அவரிடமே பேசினேன். ஓ.பி.எஸ் இங்கிருந்து செல்லும்போது பொள்ளாச்சி ஜெயராமன் அவரை அழைத்து வந்தார். அப்படி என்றால் அவர் யோக்கியமாக இருந்தாரா? அவர் செய்ததெல்லாம் எங்களுக்கு தெரியாதா? என்றும் காட்டமாக பேசினார். பொள்ளாச்சியை சேர்ந்த சிலர் தி.மு.க-விடமும் பேசினார்கள் என்றும் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் மறைவிற்கு செல்லும்போது அவரது வீட்டில் நியாயமாக நடந்ததா என்றும் கேள்வி எழுப்பினார்.
நாங்கள் தி.மு.க எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் அந்த அடிப்படையில்தான் நாங்கள் அவ்வாறு செயல்பட்டோம் என்றும் கூறிய அவர் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தி.மு.க-வுடன் செல்லலாம் என்று கூறியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்றும் கேள்வி எழுப்பினார். பொள்ளாச்சி ஜெயராமன் முதிர்ச்சி இல்லாமல் தேவையில்லாததை செய்து கொண்டிருக்கிறார் என்றும் உங்களைப் பற்றியும் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பது பற்றியும் எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமன் அவரது மகன் பற்றி சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு கருத்துக்களையும் பதிவிட வேண்டாம் என்று தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்ட வேண்டும், கமிட்டி போட வேண்டும், மீண்டும் பழைய பதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தான் நாங்கள் வைத்து வருவதாக தெரிவித்தார். நாங்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிவிட்டோம் அடுத்த தலைமுறை வரவேண்டும், அதில் மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்தார். மாவட்டங்களுக்குள் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்று கூறிய அவர் தலைமை தான் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை என்பதை ஆராய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அ.தி.மு.க. நன்றாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் சிலர் சுயநலமாக செயல்படுகிறார்கள் தேர்தலின்போது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தது எல்லாம் தெரியாதா என்றும் மனசாட்சி இல்லாமல் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
இந்த தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் நடைபெறும் கூட்டத்தில் நான் பங்கேற்றதற்கு காரணம் என்னவென்றால் நான் அவர்கள் அளித்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் ஒரு உறுப்பினராக தான் இங்கு கலந்து கொள்கிறேன். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பில் பேசிக் கொண்டிருக்கிறேன். அதேசமயம் வேலுச்சாமி அவருடைய பொறுப்புக்கு எப்பொழுதும் மரியாதை அளிப்போம் என்று தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை
source https://tamil.indianexpress.com/tamilnadu/sp-velumani-speech-pollachi-jayaraman-criticism-admk-coimbatore-meeting-12245746





