/indian-express-tamil/media/media_files/2026/08/06/amoutn-2026-08-06-20-08-05.jpg)
நியாயமான வரிப்பகிர்வு: சட்டப்பேரவையில் ஆக.7-ல் தீர்மானம்
தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகச் சட்டசபையில் ஆக.7-ல் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிய உள்ளார்.
மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாத ஒன்றாகும். தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்வதன் மூலம், தேசியப் பொருளாதாரத்திற்குத் தொடர்ந்து முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது.
மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள், எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக் கூடாது.
இந்த அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் பேரவையில் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசுக்குச் செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும். மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் விவாதிக்க உள்ளனர். விவாதத்திற்கு பின் தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்படும். அதிக வாக்குகள் பெறும் பட்சத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆக.7-ல் சட்டமன்றத்தில் 'தமிழ்நாடு மதிப்பு கூட்ட வரி (VAT) திருத்த சட்ட மசோதாவை' வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் அறிமுகம் செய்கிறார். மேலும், நாளைய அமர்வில் சட்டமன்ற பட்ஜெட் மீதான பொது விவாதமும் நடைபெற உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-to-move-special-resolution-demanding-fair-tax-share-from-centre-tn-assembly-to-push-centre-for-fair-financial-allocations-12237289





