/indian-express-tamil/media/media_files/2026/08/07/cpi-veerapandian-2026-08-07-22-36-41.jpg)
கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் இதனை தொடங்கி வைத்து பாதயாத்திரையில் பங்கேற்றார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'மாற்றத்தை நோக்கி' என்ற முழக்கத்துடன் பாதயாத்திரை பிரசார பேரணி நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் இதனை தொடங்கி வைத்து பாதயாத்திரையில் பங்கேற்றார்.
பாதயாத்திரை முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு முடிவின்படி ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குழுக்களாக பிரசார பாதயாத்திரை இயக்கத்தை தொடங்கியுள்ளோம். மத்திய அரசு அதிகாரங்களை மையப்படுத்தி மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறது. ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியை ஏற்படுத்த துடிக்கிறது. நாடாளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்து அதிகாரத்தை தக்கவைக்க மிக மோசமான, சட்டவிரோத முயற்சிகள் நடக்கின்றன. இவை அனைத்திற்கும் எதிராக குரல் எழுப்புகிறோம்.
விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், ரேஷன் பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டும், போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போக செய்யக்கூடாது, சிறு மற்றும் குறு தொழில்களுக்கு நல வாரியங்கள் அமைக்க வேண்டும், ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், நாடோடிகளின் வாழ்விற்கு அரசுகள் நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும், கல்வி மற்றும் சுகாதாரம் முழுமையாக அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை முன்வைத்து இந்த பாதயாத்திரையை நடத்துகிறோம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். செப்டம்பர் 1-ல் டெல்லியில் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம். அதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். டெல்டா பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சிறப்பு ரயில் மூலம் டெல்லிக்கு செல்ல உள்ளனர். இந்த பாதயாத்திரை இயக்கம் ஆகஸ்ட் 15-ல் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தேசிய கொடியுடன் நிறைவடையும். இந்த 10 நாள் மக்கள் திரள் இயக்கத்திற்கு தமிழ் பேசும் உலகம் பெரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய அவர், இது புதிய அரசு. நிதி இல்லாமல் திணறுவது புரிகிறது. மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இது முழுமையான பட்ஜெட் அல்ல. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்போதுதான் பட்ஜெட் முழுமை பெறும் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற கருத்து குறித்த கேள்விக்கு, ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் கூட்டு. டாக்டர் அம்பேத்கர் கூறியது போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள். எதிர்க்கட்சி இல்லையெனில் ஆளும் கட்சிக்கும் சட்டமன்றத்திற்கும் அர்தமில்லை. பொது நலன் தொடர்பான கேள்விகளை எதிர்க்கட்சி தலைவர் எழுப்பும்போது முதலமைச்சரோ, அவைத் தலைவரோ, அமைச்சர்களோ பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். பதில் சொல்ல முடியாது என யாருக்கும் சொல்ல உரிமையில்லை என்றார்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலை குறித்த கேள்விக்கு, தற்போதைய அரசு முந்தைய அரசு எடுத்த அதே நிலையை பின்பற்றுகிறது. இது நல்ல அணுகுமுறை. தமிழ்நாடு தனது உரிமைக்காக உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறது என அறிவிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்பது நல்லது என்றார்.
கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்த கேள்விக்கு, கல்விக்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரம் முழுமையாக அரசின் பொறுப்பு. அதுதான் நல அரசு. மத்திய அரசு இந்த பொறுப்புகளில் இருந்து மெல்ல விலகுகிறது. உலக வங்கியும் உலக நிதி முதலாளிகளும் மாநில அரசுகளையும் விலகுமாறு அழுத்தம் கொடுக்கின்றன. நாடு அந்த திசையில் செல்லக்கூடாது என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-veerapandian-padayatra-speech-on-cm-mekedatu-and-delimitation-12240547





