திருவள்ளூர் மாவட்டம் தண்டலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழக அரசின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்குப் பயனற்றதாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் தண்டலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழக அரசின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்குப் பயனற்றதாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும், எல்லைக் கடத்தல் தடுப்பு, நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் திருமழிசை நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தண்டலம் நகரத்தில் மாவட்ட தலைவர் பி.சுரேஷ்பாபு தலைமையில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் பிஆர்.பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டம் ஆந்திரா தெலுங்கானா கர்நாடக மாநில எல்லையை ஒட்டி இருப்பதால் அங்கு விளைவிக்கக்கூடிய நெல்லை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு வருவாய் துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட அதிகாரிகள் துணையோடு உள்ளூர் நபர்களும் துணை போகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த சுங்கம் சாளைகள் அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.
தவறான வகையில் நெல் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
கொசஸ்தலை- ஆரணி ஆறுகளை இணைத்து நிலத்தடி நீரை மேம்படுத்து வதோடு,சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.
திருமழிசை சாட்டிலைட் சிட்டி அமைப்பதற்கு 1996ல்199 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க 2021 இல் உத்திரவிட்டது. மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதால் விவசாயிகளுக்கு நிலத்தை ஒப்படைக்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து விட்டது. இது நாள் வரையிலும் விவசாயிகள் வசம் நிலத்தை ஒப்படைக்காமல் அரசு காலம் கடத்தி வருகிறது. உடனடியாக விவசாயிகள் பெயரில் பட்டா மாற்றம் செய்து ஒப்படைக்க முன்வர வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் டெல்டாவிற்கு இணையான வகையில் விவசாயம் செய்யப்படுவதால் செங்காத்த குளம் அறிவுசார் நகரத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க வேண்டும்.
எல் நினோ தாக்குதலில் இருந்து பாதுகாத்திட ஏரி குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி கரைகளை உயர்த்தி நீர் சேமிப்பு கொள்ளளவு உயர்த்திட வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் உரிய நிதியை கேட்டு பெற வேண்டும்.
தென் மாநிலங்களில் முதலமைச்சர்கள் மாநாடு விரைவில் சென்னையில் நடைபெறுவதை வரவேற்கிறோம். இம்மாநாட்டில் காவிரி முல்லைப் பெரியாறு, பாலாறு தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் நீர்தாவா பிரச்சனைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட ஒத்த கருத்தை உருவாக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.
தமிழக முதலமைச்சரின் மூன்றாவது முறை கடன் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. 8 அமைச்சர்கள் அமர்ந்து கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி பேசி உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படையில் கடன் அறிவிப்பு வெளிவராதது விவசாயிகளுக்கு பயனற்றதாகி விட்டது. உடனடியாக மறுபரிசீலனை செய்து ஒரு லட்சம் வரையிலும் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் விஜய் பிரசாத், சென்னை மண்டல தலைவர் மெதூர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் மோகன கிருஷ்ணா, பொருளாளர் அகஸ்தீஸ்வரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.