source https://tamil.indianexpress.com/explained/trump-cites-india-election-system-for-us-voter-id-rules-12393574
/indian-express-tamil/media/media_files/2026/08/18/trump-exp-2026-08-18-22-12-29.jpg)
முன்னதாக டிரம்ப் வாக்காளர் மோசடிகள் குறித்துத் தனது கவலையைத் தெரிவித்திருந்தார். Photograph: (Photo: AP)
எழுதியவர்: ரிஷிகா சிங்
அமெரிக்க வாக்காளர்களுக்கு ஏன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவையில்லை என்று இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது நிர்வாகத்திடம் கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) தெரிவித்தார். மேலும் இதனை இந்தியாவின் தேர்தல் முறையோடு ஒப்பீடும் செய்தார்.
"இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எங்கள் நிர்வாகத்திடம் -செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல்களை நடத்த முடிகிறது? என்று கேட்டார். இந்தியாவின் கடந்த தேர்தலில் 64.6 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். அதில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர், மேலும் ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தைக் வைத்திருக்க வேண்டியிருந்தது. நாம் உடனடியாக 'சேவ் அமெரிக்கா சட்டத்தை' (THE SAVE AMERICA ACT) நிறைவேற்ற வேண்டும் - அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்," என்று அவர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் தனது சொந்தத் தேர்தல் நடைமுறைகளை மாற்றுவதற்காக, ஆதார் இணைப்பைக் குறிப்பிடும் இந்தியாவின் முறையையும், பிரேசில் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் முறைகளையும் ஏற்கனவே மேற்கோள் காட்டியுள்ளது. பல ஆண்டுகளாகவே, வாக்காளர் அடையாள அட்டை என்பது அமெரிக்க அரசியலில் இரு முக்கியக் கட்சிகளிடையே பெரும் பிளவை ஏற்படுத்தும் விவகாரமாக உள்ளது. குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பதற்கு அடையாள அட்டையைக் கட்டாயமாக்க வேண்டும் என ஆதரிக்கும் வேளையில், ஜனநாயகக் கட்சியினர் அதை எதிர்த்து வருகின்றனர். எனவே, அமெரிக்கர்கள் தற்போது எவ்வாறு வாக்களிக்கிறார்கள் மற்றும் டிரம்ப் இப்போது இந்த விவகாரத்தை ஏன் எழுப்புகிறார்?
அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தேவையா?
பொதுவாக, ஆம். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தனக்கான வாக்காளர் அடையாள விவாதங்களை சுயமாக அமைத்துக் கொள்கின்றன. பெரும்பாலான மாநிலங்கள் நேரில் வந்து வாக்களிப்பதற்கு ஓட்டுநர் உரிமம் (Driver's License), மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு (Passport) போன்ற ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துவதாக வாக்காளர்களுக்கான அமெரிக்க அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.
இருப்பினும், இத்தகைய அடையாள அட்டைகள் இல்லாதது கூட எப்போதும் வாக்காளர்களைத் தடுத்து நிறுத்துவதில்லை. "சில மாநிலங்கள் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் கையெழுத்திடக் கேட்கலாம்... மற்ற மாநிலங்கள் உங்களைத் தற்காலிக வாக்களிப்பு செய்ய அனுமதிக்கும்" என்று அந்த இணையதளம் கூறுகிறது.
இன்று நடைமுறையில் உள்ள பல நிபந்தனைகள், குறிப்பாகப் புகைப்பட அடையாள அட்டை தேவைகள், கடந்த சில தசாப்தங்களில்தான் நடைமுறைக்கு வந்தன. 2000-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜார்ஜ் டபிள்யூ புஷ், அல் கோரைத் தோற்கடித்த சம்பவத்திலிருந்து இவற்றை அறியலாம். புஷ்ஷின் வெற்றிப் பாதையில் புளோரிடா மாநிலத்தின் வாக்கு மறுஎண்ணிக்கை மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்ற வழக்கு எனப் பல சர்ச்சைகள் அடங்கியிருந்தன.
பின்னர் 2002-ல், வாக்களிப்பு முறையைச் சீரமைக்கவும், மாநிலங்கள் முழுவதும் குறைந்தபட்சத் தரநிலைகளை நிலைநிறுத்தவும் 'ஹெல்ப் அமெரிக்கா வோட் ஆக்ட்' (HAVA) நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'ப்ரென்னன் சென்டர் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பின் கூற்றுப்படி, இந்தச் சட்டம் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்யும்போது, பெரும்பாலான அமெரிக்கர்களிடம் இருக்கும் ஓட்டுநர் உரிம எண் அல்லது சமூக பாதுகாப்பு எண்ணின் (Social Security Number) கடைசி நான்கு இலக்கங்கள் போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. அவை இல்லாத பட்சத்தில், வாக்காளர் பதிவிற்காக அவர்களுக்கு ஒரு தனித்துவமான அடையாள எண் ஒதுக்கப்படுகிறது.
குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு (புதிய வாக்காளர்கள் உட்பட), தற்போதைய மற்றும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை, மின்சாரம்/தண்ணீர் கட்டண ரசீதுகள், வங்கி கணக்கு விவரங்கள், அரசு காசோலை மற்றும் சம்பள ரசீது போன்ற ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிப்பதன் அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இன்று, அமெரிக்காவின் 36 மாநிலங்கள் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் ஏதேனும் ஒரு வடிவத்திலான அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக மாநில சட்டமன்றங்களின் தேசிய மாநாடு (என்.சி.எஸ்.எல்) அமைப்பு தெரிவிக்கிறது. "மீதமுள்ள 14 மாநிலங்கள் மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகியவை வாக்காளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலான நேரங்களில், வாக்குச்சாவடியில் வழங்கப்படும் கையொப்பம் போன்ற பிற அடையாளத் தகவல்கள், ஏற்கனவே பதிவில் உள்ள தகவல்களுடன் சரிபார்க்கப்படுகின்றன" என்றும் அது மேலும் சேர்க்கிறது.
வாக்காளர் அடையாள அட்டையில் டிரம்ப் கவனம் செலுத்துவது ஏன்?
அமெரிக்க அரசியலில் இரு முக்கிய அரசியல் கட்சிகளும் அடையாள அட்டை விவகாரத்தில் வெவ்வேறான நிலப்பாடுகளைக் கொண்டிருப்பதே இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம் ஆகும்.
"அடையாள அட்டை தேவைகளை அதிகரிப்பது, ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதைத் தடுக்கும் என்றும், தேர்தல் நடைமுறையில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இத்தகைய மோசடிகள் மிகக் குறைவாகவே நடப்பதாகவும், வாக்காளர்கள் மீதான இந்த நிபந்தனைகள் அவர்களின் வாக்களிக்கும் உரிமையைத் தேவையின்றி கட்டுப்படுத்துவதாகவும், தேர்தல் அதிகாரிகளுக்குத் தேவையில்லாத செலவுகளையும் நிர்வாகச் சுமைகளையும் ஏற்படுத்துவதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்" என்று என்.சி.எஸ்.எல் குறிப்பிடுகிறது.
இந்த பிளவு மாநில அளவிலும் எதிரொலிக்கிறது. கடுமையான அடையாள அட்டை விதிகளைக் கொண்ட மாநிலங்கள் பெரும்பாலானவை அலபாமா மற்றும் டெக்சாஸ் போன்ற 'சிவப்பு மாநிலங்கள்' (வரலாற்று ரீதியாகக் குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பவை) ஆகும். தளர்வான விதிகளைக் கொண்ட மாநிலங்கள் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் போன்ற 'நீல மாநிலங்கள்' (வரலாற்று ரீதியாக ஜனநாயகக் கட்சி ஆதரவு மாநிலங்கள்) ஆகும்.
2017-ம் ஆண்டில் "அமெரிக்க மாநிலங்களில் வாக்காளர் அடையாளச் சட்டங்களை ஏற்றுக்கொள்வதைப் புரிந்துகொள்வது" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், கல்வியாளர்கள் டேனியல் ஆர் பிகர்ஸ் மற்றும் மைக்கேல் ஜே ஹன்மர், "2000-ம் ஆண்டிலிருந்து முதன்முறையாக வாக்காளர் அடையாளச் சட்டங்களை இயற்றும் மாநிலங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது (14-லிருந்து 36 ஆக)" என்று குறிப்பிட்டனர். கட்டாயப் புகைப்பட அடையாள அட்டைகள் 2000-களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
"இந்தப் பிளவின் மையம், கட்சி ரீதியான ஆதாயங்கள் மற்றும் தேர்தல் வெற்றியின் கணக்கீடுகளிலிருந்தே உருவாகிறது," என்று அவர்கள் எழுதினர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்கள் போன்ற ஜனநாயகக் கட்சி ஆதரவுப் பிரிவினர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு... இது குடியரசுக் கட்சியினருக்குத் தங்களது தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எனவே, ஜனநாயகக் கட்சியினரின் வாக்கு சதவீதத்தைக் குறைக்கும் நோக்கில் தான் குடியரசுக் கட்சியினர் அடையாள அட்டை சட்டங்களை ஆதரிக்கின்றனர் (மற்றும் ஜனநாயகக் கட்சியினர் எதிர்க்கின்றனர்) எனச் சந்தேகிப்பது நியாயமானதே" என்று அவர்கள் ஆய்வுகளைச் மேற்கோள் காட்டி தெரிவித்தனர்.
டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள 'சேவ் அமெரிக்கா மசோதா' (The Save America Bill), கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்கு முன் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை, குடியுரிமைக்கான சான்று மற்றும் தபால் வழி வாக்களிப்பு முறைக்குத் தடை (நோய், ஊனம், ராணுவம் அல்லது பயணம் தவிர) ஆகியவற்றைக் கட்டாயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த மசோதாவின் நேரமும் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இது செனட் சபையில் தடையைச் சந்திக்கிறது, அங்கு குடியரசுக் கட்சியினர் 100 இடங்களில் 53 இடங்களை மட்டுமே வைத்துள்ளனர், ஆனால் இந்த மசோதா நிறைவேற 60 வாக்குகள் தேவைப்படுகின்றன. கடந்த காலத்தில், 2020 அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தன்னிடம் இருந்து தேர்தல் திருடப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார், இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது





