source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dmk-support-to-bjp-delimitation-bill-jawahirulla-and-ansari-explained-12849568
28 11 2026
/indian-express-tamil/media/media_files/2026/11/28/jawahirulla-2026-11-28-17-47-06.png)
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த மசோதாவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி ஆகிய இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது இருக்கும் 543 நாடாளுமன்ற தொகுதிகளை மேலும் அதிகரிக்கவும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவும், மத்திய பா.ஜ.க அரசின் சார்பில், தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டது. கடந்த முறை தமிழகத்தின் தி.மு.க. ஆட்சியின்போது நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயன்றது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
குறிப்பாக தமிழகத்தில் அப்போது முதல்வராக இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இதனிடையே 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் த.வெ.க ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி த.வெ.க கூட்டணியில் இணைந்தது. ஆனால் த.வெ.க.வுக்கு நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இல்லாததால், அக்கட்சி இதில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
இதனிடையே கடந்த முறை இந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த தி.மு.க. தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க எம்.பிக்கள் ஆலோசனைக்கூட்டத்தில் தொகுதுி மறுவரையறையின் புதிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அறிவித்திருந்தார். இதன் மூலம் தி.மு.க பா.ஜ.க.வை நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ள நிலையில், தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா ஆகிய இருவரும் தி.மு.க. ஆதரவு குறித்து விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, தொகுதி மறுவரையறை தேவையில்லை என்றால், அடுத்த ஆண்டு, பா.ஜ.க. தான் விரும்பக்கூடிய வகையில், இந்த தொகுதி மறுவரையறையை செய்துவிடும். அப்படி செய்யும்போது இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவோம். தற்போது இருக்கும் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமே நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்காத போது 850 என்பது அதிகம் தான். ஆனால் இப்போது இந்த திருத்ததத்தை செய்யாவிட்டால் அடுத்த ஆண்டு இன்னும் மோசமான ஒரு நிலைக்கு செல்லும்.
ஒட்டுமொத்தமாக சொல்லிக்கொள்வது என்னவென்றால், பா.ஜ.க. இந்த நாட்டின் ஜனநாயகத்தை, மக்கள் பிரதிநிதித்துவத்தை, அறிக்கக்கூடிய ஒரு திசையை நோக்கி செல்கிறது. அதற்கு ஒரு பிரேக் போடக்கூடிய ஒரு வகையில், இந்த தொகுதி மறுவரையறைக்கு கொடுத்த ஆதரவை பார்க்க முடியுமே தவிர, அவர்களின் கெட்ட நோக்கம் நிறைவேற்றுவதை. ஓரளவுக்கு தடுப்பதற்கான முயற்சியாகத்தான் இதை பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
தமிமுன் அன்சாரி கூறுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் என்ற அடிப்படையில் எங்களுடைய மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். இப்போது வருகின்ற 30-ஆம் தேதி தொகுதி மறுவரையறை சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெறப்போகக்கூடிய நிகழ்வுகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது, என்ன காரணங்களுக்காகச் சில முடிவுகளை நாம் எடுக்கிறோம் என்பதை எங்களுக்கு விளக்கிப் பேசினார்கள். நாங்களும், எஸ்.டி.பி.ஐ-யும், அதேபோல மனிதநேய மக்கள் கட்சி, ஈஸ்வரன் அவர்களும் எங்களுடைய பல்வேறு கருத்துகளையும், கேள்விகளையும், ஐயங்களையும் எடுத்து வைத்து உரையாடினோம்.
அப்போது, ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இது சார்ந்து நாங்கள் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த எந்த ஒரு முடிவிற்கும் எதிராகப் புதிய முடிவுகள் எடுக்கப்படவில்லை. கூடுதலாக, இப்போது ஒன்றிய பாஜக அரசு 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கையை இந்தத் திருத்தத்தில் (Amendment) இணைத்திருக்கிறார்கள்; அதுவே ஒரு பெரிய வெற்றி. அடுத்ததாக, எந்த மாநிலத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் இது உயர்த்தப்படும் என்ற ஒரு குரலைச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தத் தொகுதி மறுவரையறை சம்பந்தமாகப் போடக்கூடிய அந்தக் கமிட்டியில் தமிழ்நாட்டிற்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு பிரதிநிதிகள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்த வேண்டும். அதில் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதையும் நாம் எடுத்துரைத்திருக்கிறோம். அதையே அவர்களும் பேசுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இதைத் தவறவிட்டால் அடுத்த ஆண்டு அவர்கள் முழு பலத்தோடு, தங்கள் விருப்பத்திற்கேற்ப எதையும் செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய அபாயகரமான சூழலும் இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், இது ஒரு கசப்பான, நிர்ப்பந்தமான, நெருக்கடியான சூழல். இந்த நேரத்தில் எதைச் செய்தால் இவர்களுக்கு ஒரு தடுப்பணை போட முடியும் என்று பார்க்கிறோம்.
மொத்தத்தில், பாஜக-வும் ஜனநாயக விரோத சக்திகளும் இந்தியாவின் ஜனநாயகத்தைச் சாகடிப்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இப்போது நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் (MP) மூன்று அல்லது மூன்றரை நிமிடங்கள்தான் பேச முடிகிறது. எண்ணிக்கையை உயர்த்தி நாடாளுமன்றத்தில் 850 பேர் வந்ததற்குப் பிறகு, இனிமேல் யார் எந்தக் குரலை எடுத்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கும் நேரம் கிடைக்காது. "நேரம் இல்லை" என்று சொல்லி, பல விஷயங்களை மனம்போன போக்கில் தீர்மானமாகக் கொண்டு வந்துவிடுவார்கள்; அந்த அபாயம் இருக்கிறது.
ஒரு கட்சி ஆட்சி முறையை நோக்கி இந்தியா நகர்வதாக நாம் கவலைப்படுகிறோம். இந்த நேரத்தில், ஜனநாயகச் சக்திகள் எதையெல்லாம் செய்து குறைந்தபட்சப் பாதுகாப்பை அரசியல் சாசனச் சட்டத்தின் எல்லைகளுக்கு உட்பட்டுப் பெற முடியுமோ, அதைச் செய்ய வேண்டிய முயற்சியில் இருக்கிறோம். அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.





