ஐதராபாத் மத்திய பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, பாசகவின் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஐதராபாத் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு. (செய்தி)
தற்கொலை செய்து கொண்ட வெர்முலா ரோகித், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஆய்வு மாணவராவார். இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் வட்டத்தில் ரோகித் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சக மாணவர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு எதிராக போராடினார். இந்த போராட்டத்தின் போது, மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் தொடர்புடைய அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பினர் பல்கலைக்கழக மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் தங்களை தாக்கியதாக அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் அந்த மாணவர்கள் மீது முதற்கட்ட விசாரணையை தொடங்க அனுமதியளித்தது. ஆனால் மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழகம் தனது முடிவை திரும்ப பெற்றுக் கொண்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்களை பழி வாங்கும் கடந்த டிசம்பர் 21ம் தேதி விடுதி, உணவகம், நூலகம் என்று மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவெளிகள் எதையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து போராடி வந்தனர். பல்கலைக்கழக நிர்வாகத்தின் சமூக புறக்கணிப்பாலும், தொடர் நெருக்கடிகளாலும் மனமுடைந்த ரோகித் தலித் பேராசிரியர்கள் கூட நமக்கு ஆதரவாக இல்லையே என்று தன் நண்பர்களிடம் தனது ஆதங்கத்தை கூறி கதறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் விடுதி அறைக்குள் நுழைந்த அவர் தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ரோகித்தின் உடலை வைத்து மாணவர்கள் நேற்றிரவு முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களைக் கைது செய்து ரோகித்தின் உடலைக் கைப்பற்றினர். பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், பலியான வெர்முலா ரோகித்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஐதராபாத் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
(ஒன் இந்தியா செய்தி)