மேற்குவங்க மாநிலம் மால்டாவில் நபிகள் குறித்து பா.ஜ.க., பிரமுகர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பா.ஜ.க., பிரமுகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாம் சமுதாயத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
போராட்டக்காரர்களை களைக்க எல்லைப் பாதுகாப்பு போலீசார் களமிறங்கினர். போராட்டக்காரர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு தீவைத்து எரித்தனர். வாகனங்களையும் சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மேற்கு வங்க மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் மத வன்முறை அல்ல என்றும், எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் என்றும் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சர்வதேச வர்த்தக மாநாட்டின் போது தெரிவித்தார்.
இந்நிலையில் வன்முறை நிகழ்ந்த மால்டா பகுதியில் நுழைய முயன்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ-க்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து காவல்நிலையத்தின் முக்கிய பிரமுகர் அறையில் வைக்கப்பட்டனர்.
பின்னர் மால்டாவின் காலியசக் பகுதியில் நுழையும் தங்களது திட்டத்தை கைவிடுவதாக எம்.எல்.ஏ -க்கள் கூறியதை அடுத்து அவர்களை கொல்கத்தாவிற்கு ரெயிலில் ஏற்றிவிட போலீசார் முடிவு செய்துள்ளனர்.