வியாழன், 5 அக்டோபர், 2017

டெங்குவால் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் பலியானதாக மு.க.ஸ்டாலின் தகவல் October 05, 2017


டெங்குவால் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் பலியானதாக மு.க.ஸ்டாலின் தகவல்


டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை தமிழக அரசு மூடி மறைப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

தமது தொகுதியான கொளத்தூரில் டெங்குவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். 

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மறைப்பதிலேயே தமிழக அரசு குறியாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். டெங்குவால் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, டெங்கு ஒழிப்பு குறித்த பிரச்சார வாகனங்களை சென்னை அருகே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அமைச்சர்  டெங்கு காய்ச்சலை தடுக்க  நிலவேம்பு கசாயம் வழங்கினார். பின்னர் காமராஜர் நகர் பெண்கள் மேல்நிலைபள்ளியில்  டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரம் பேணுவது குறித்த உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு ஒழிப்பு குறித்த  பிராச்சார வாகனங்களையும்  அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடக்கி வைக்க உள்ளார். 

Related Posts: