வியாழன், 14 ஜனவரி, 2016

தேக்கு மரம்... வெட்டுவதில், சிக்கல்... கைகொடுக்கும் தீர்வுகள் !



‘தேக்கு மரம் வளர்த்தால், காசு கொட்டும், செஞ்சந்தனம் வளர்த்தால், தங்கம் காய்க்கும், என்பன போன்ற கருத்துக்களை நம்பி, சொந்தத் தோட்டத்தில் எந்த மரங்களை வளர்த்தாலும், கடைசியில், அவற்றை வெட்டி விற்பனை செய்யும்போது, படாதபாடுதான் படவேண்டியிருக்கிறது. குறிப்பாக, தேக்கு உள்ளிட்ட சில மரங்களை வளர்க்கும் விவசாயிகள், வனத்துறையினரின் அலைக்கழிப்பால்... பட்டா நிலத்தில் விளைந்த மரங்களை, சொந்தப் பயன்பாட்டுக்குக்கூட எடுத்துச் செல்லக்கூட முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தன்னுடைய தோட்டத்தில் விளைந்த மரங்கள்தான் என்று, விதிகளின்படி வருவாய்த்துறையின் சான்றிதழ் வைத்திருந்தாலும், அவர்களை கெஞ்ச வைப்ப-தோடு, லஞ்சமாக சில பல ஆயிரங்களைப் பெற்றுக் கொண்டுதான் அனுமதியே வழங்குகிறார்கள் வனத்துறை ஊழியர்கள்.
இதைப்பற்றி புலம்பாத மரப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளே இல்லை என்கிற நிலையில்... இதற்கான தீர்வு தேடி, சென்னையில் உள்ள தமிழ்நாடு வனத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரி-களிடம் பேசினோம். பெயர், அடையாளம் மறைத்தபடி பேசிய நேர்மையான அந்த அதிகாரிகள், மரங்களை வெட்டுவதைப் பற்றிய சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
‘‘அரசுக்குச் சொந்த மான காடுகளில் உள்ள மரங்களையும், தனியார் நிலங்களில் உள்ள மரங்களையும், திருட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காகத்தான் இந்த விதிமுறை உருவாக்கப் பட்டது. இதில் பூவரசு, வேம்பு, வாகை, சவுக்கு, மூங்கில், தைலம், சிசு, இலவு உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் இடம்பெற்று இருந்தன. இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளான தால்... தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், ரோஸ்வுட் (ஈட்டி), கருங்காலி உள்ளிட்ட 5 மரங்களைத் தவிர, மற்ற 36 வகையான மரங்களுக்கு, 2007-ம் ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் மரங்களை, அவர்களே பாதுகாத்து கொள்கிறார்கள். மலைப்பிரதேசக் காடுகளில் உள்ள மரங்களைப் பாதுகாக்க தனிச்சட்டங்கள் உள்ளன.
இந்நிலையில், ‘தேக்கு, செஞ்சந்தனம், ரோஸ்வுட், கருங்காலி உள்ளிட்ட மரங் களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். இது நியாயமானதும் கூட. கண்டிப்பாக தமிழக அரசு இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். இந்த விதிமுறை நீக்கப்பட்டால்தான், விவசாயிகள் இந்த மரங்களைத் துணிச்சலோடு வளர்ப்பார்கள். வனத்துறையில், உள்ள ஒரு சில லஞ்ச பேர்வழிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து, காப்பாற்றப்படுவார்கள்.
விவசாயிகள் வளர்க்கும் மரங்களை வருவாய்த்துறையினரின் ஆவணங்களில் பதிவு செய்து கொள்வது மிகவும் நல்லது. திருட்டுப்போனாலும் கூட, காவல்துறையில் புகார் தெரிவிக்க, இது உதவியாக இருக்கும். வனத்துறையினரின் மிரட்டலில் இருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இது உதவும். சந்தன மரங்களைப் பொறுத்தவரை, வனத்துறையினர்தான் வெட்டி, ஏலம்விட்டு, விவசாயிகளுக்கு பணம் கொடுப்பார்கள். இதனை தனியார் வெட்ட முடியாது.
தேக்கு உள்ளிட்ட 4 வகையான மரங்களை வெட்டுவதற்கு, 15 நாட்களுக்கு முன்பே மாவட்ட வனத்துறை அலுவலகத் தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பக் கடிதத்தோடு, ‘இந்த மரங்கள் தன்னுடையதுதான்’ என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழையும் இணைத்து, பதிவுத் தபாலில் அனுப்பி... அதற்கான சான்றையும் வைத்துக்கொள்ள வேண்டும். 15 நாட்கள் கடந்த நிலையிலும், வனத்துறையினர் வரவில்லை என்றால், உங்களுடைய மரங்களை வெட்டி, நீங்களே துண்டு போட்டுக் கொள்ளலாம். ஆனால், அதன் அளவுகளைத் துல்லியமாக அளந்து, குறித்துக் கொள்ள வேண்டும். அடிமரம், நடுமரம், நுனிமரங்களின் சுற்றளவு, நீளம் உள்ளிட்ட விவரங்களைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். மரத்துண்டுகளில் இது உங்கள் மரம்தான் என்பதற்கான குறியீடு இடவேண்டும்.
பிறகு, மாவட்ட வனத்துறை அலுவலகத் தில், தனியார் சொத்துக் குறியீடு கட்டணமாக 200 ரூபாய் பணம் செலுத்தி, ரசீது பெறவேண்டும். இதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தால், அரசாங்க கருவூலங்களில் பணத்தைச் செலுத்தி ரசீது பெறலாம். மரத்துண்டுகளின் அளவையும், சொத்துக் குறியீடு கட்டண ரசீதையும் இணைத்து, குறியீடு கோரும் விண்ணப்பத்தை மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
கண்டிப்பாக, 15 நாட்களுக்குள் சொத்துக் குறியீடும், அனுமதியும் கிடைத்துவிடும். அதற்கு மேலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், சென்னையில் உள்ள தமிழ்நாடு வனத்துறை தலைமை அலுவகத்துக்கு மேற்கண்ட ஆதாரங்களோடு பதிவுத் தபாலில் புகார் தெரிவிக்கலாம். இதற்கு, கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். அதற்கு மேலும் தாமதமானால், நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்றனர்.
இப்பிரச்னை குறித்து, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்கம்) இருளாண்டியிடம் பேசினோம். ‘‘மரத்தை வெட்டுவதற்காக விண்ணப்பித்த 15 நாட் களுக்குள் கண்டிப்பாக அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், விவசாயிகள் முதலில் எங்களுக்குப் புகார் தெரிவிக்கலாம். கண்டிப்பாகத் தீர்வு கிடைக்கும்” என்று சொன்னார்.
முகவரி:
கூடுதல் முதன்மைத் தலைமை
வனப் பாதுகாவலர்,
தமிழ்நாடு வனத்துறைத் தலைமை அலுவலகம்,
எண்:1, பனகல் மாளிகை பில்டிங்,
8-வது மாடி, கலைஞர் வளைவு அருகில்,
ஜோன்ஸ் ரோடு, சைதாப்பேட்டை,
சென்னை: 600015
தொலைபேசி: 044-24348059

Related Posts: