புதன், 6 ஏப்ரல், 2016

போராட்டம் கைவிடப்பட்டது


திமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளர் நாகை நாகராஜ் என்பவர் பொதுக்கூட்டத்தில் பேசும் போது ’’அன்பர்களே, சேலத்திலே சொல்கிறேன். கேட்டு குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போதுதான் சிறுபான்மை இனத்தினுடைய மிகப் பெரிய இனமாக இருக்கிற இஸ்லாமிய இனத்தைச் சார்ந்த அனைத்து இயக்கங்களும் ஒட்டு மொத்தமாய் என் தலைவர் கலைஞரை அறிவாலயத்தில் பார்த்து, நீதான் இறைவன் அனுப்பிய நபிகள் நாயகத்துக்கு பிறகு எங்கள் இனத்தை காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.ஐ,யும் மனித நேய மக்கள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் சேர்ந்து வந்திருக்கிறது” என பேசினார். முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்துக்குப் பின் கருணாநிதி இறைத்தூதராக உள்ளார் என்று அவர் குறிப்பிட்டு இருப்பது இஸ்லாத்துக்கு எதிரான போர்ப்பிரகடனம் என்று முஸ்லிம்கள் கொந்தளித்தனர். மூன்று முஸ்லிம் இயக்கங்களைக் குறிப்பிட்டு இந்த பேச்சாளர் இவ்வாறு பேசியிருந்தும் சம்மந்தப்பட்ட மூன்று இயக்கத்தினரும் அசாத்திய மவுனம் காத்தது சமுதாயத்தின் கோபத்தை அதிகரித்தது.
இதை உரிய முறையில் நாம் கண்டிக்காது விட்டால் நாளை ஒவ்வொருவரும் நபிகள் நாயகத்தின் மதிப்பைக் குலைக்கும் தைரியம் பெறுவார்கள். இனிமேல் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக நபிகள் நாயகத்தைப் பயன்படுத்துவதற்கு திமுகவினர் மட்டுமின்றி மற்ற கட்சியினரும் அஞ்சும் அளவுக்கு நாம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும், போராட்டத்தையும் அறிவிக்க வேண்டும் என்று பரவலாக பல பகுதிகளில் இருந்தும் கோரிக்கை வந்தது.
இதன் காரணமாக வரம்பு மீறி பேசிய நாகராஜை கண்டித்து சென்னையில் 07/04/2016 வியாழன் அன்று போராட்டத்தை நாம் அறிவித்தோம்.
நிலைமை விபரீதமாகப் போவதை அறிந்த நாகை நாகராஜ், தான் தவறான நோக்கத்தில் இப்படி பேசவில்லை வாய்தவறி வந்து விட்டது என்று வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தைப் பரப்பினார்.
இந்த நிலையில் திமுக கழக தலைமை பொறுப்பில் உள்ள ஆர் எஸ் பாரதி அவர்கள் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு அவர் பேசியதற்கு உங்கள் அலுவலகம் வந்து மன்னிப்புக் கேட்கச் செய்கிறோம். அவரை சஸ்பென்ட் செய்துள்ளோம் என்று கட்சியின் தலைமை சார்பாக தெரிவித்தார்கள்.
நாகராஜும் தான் பேசியது தவறுதான் என்றும், வாய் தவறி வந்து விட்ட வார்த்தை என்றும் நம்மை தொடர்பு கொண்டு வறுத்தம் தெரிவித்தார். மேலும் இதைக் கடிதமாகவும் நமக்கு எழுதித்தந்தார். இதன் பின்னர் இவ்விவகாரத்தை மாநில நிர்வாகக் குழு பரிசீலனை செய்தது.
ஏற்கனவே முத்தாரம் இதழில் நபிகள் நாயகம் குறித்து தவறாக எழுதிய போது நாம் இது போல் போராட்டத்தை அறிவித்தோம். முத்தாரம் இதழ் மன்னிப்பு கேட்டு இனிமேல் இவ்வாறு நடக்காது என்று உறுதி அளித்த பின்னர் போராட்டத்தைக் கைவிட்டுள்ளோம். எனவே போராட்டம் என்பது நோக்கமல்ல, மாறாக இதுபோல் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நம் நோக்கமாகும்.
மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத்தை வைத்து அரசியல் நடத்தும் இயக்கம் அல்ல. சம்மந்தப்பட்டவர்கள் அதை ஒப்புக் கொண்டு திருந்திக் கொண்டால் இஸ்லாம் காட்டித்தந்த வழியில் அதை ஏற்றுக் கொள்வதில் ஜமாஅத்துக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.