இஸ்ரேலியருக்கு விமான டிக்கெட் கிடையாது – குவைத் அதிரடி.!
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருக்கும் நபர் ஒருவருக்கு விமான டிக்கெட் விற்பனை செய்ய மறுத்துள்ள குவைத் ஏர்வேஸ் விமான நிறுவனம் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டு குடிமகன் ஒருவர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் இருந்து ஜேர்மனிக்கு பயணமாக குவைத் ஏர்வேஸ் நிறுவனத்திடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
ஆனால், அந்த நபர் இஸ்ரேல் குடிமகன் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி, ஒருவரி இனம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றை காரணம் காட்டி பிரிவினையை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இதனை அறிந்த அந்த வாலிபர் உடனடியாக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து குவைத் ஏர்வேஸ் விமானம் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதற்கு சுவிஸில் உள்ள குவைத் ஏர்வேஸ் நிறுவன இயக்குனர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.‘கடந்த டிசம்பர் 2015 ஆண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் ஏர்வேஸ் விமானங்களில் இஸ்ரேல் நாட்டு குடிமகன்களை ஏற்றக்கூடாது’ என்ற கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த விதிமுறைகளுக்கு அமெரிக்க போக்குவரத்து துறை எதிர்ப்பு தெரிவித்ததால், நியூயோர்க் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களுக்கு இடையே குவைத் ஏர்வேஸ் விமான நிறுவன சேவைகளை அதிரடியாக நிறுத்தி விட்டோம்.
இதே போல், இஸ்ரேல் நாட்டின் El Al என்ற தேசிய விமான நிறுவனம் குவைத் நாட்டு குடிமகன்களை அவர்களுடைய விமானங்களில் பயணிக்க அனுமதிக்காது.
எனவே, தற்போது வாலிபர் தொடுத்துள்ள வழக்கு எங்கள் நிறுவனத்தை எவ்விதத்திலும் பாதிக்காது’ என குவைத் ஏர்வேஸ் இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.





