புதுடெல்லி:
கடந்த 1849–ம் ஆண்டு, இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகள் தோற்கடித்தன. சீக்கிய சாம்ராஜ்யத்தின் சொத்துகளையும் கவர்ந்து சென்றன. அப்படி எடுத்துச் சென்ற பொருட்களில், பழமையான, பிரசித்திபெற்ற கோஹினூர் வைரமும ஒன்றாகும். ஒரு ஒப்பந்தம் மூலம், அது கிழக்கு இந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது அந்த 108 காரட் வைரத்தை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அணிந்து வந்தார்.
இத்தகைய பின்னணி கொண்ட கோஹினூர் வைரத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவில் அவ்வப்போது கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம், இங்கிலாந்து அரசால் திருடிச் செல்லப்படவும் இல்லை, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவும் இல்லை. மகாராஜா ரஞ்சித் சிங்கால் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று தெரிவித்தது. இதனால், கோஹினூர் வைரம் மீதான உரிமையை இந்தியா விட்டுக் கொடுத்து விட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் நிலையில் ஒரே நாளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இரவு மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோஹினூர் வைரம் பற்றிய மத்திய அரசின் கருத்து, இன்னும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த செய்தி, உண்மையின் அடிப்படையில் அமையவில்லை.இந்த நேரத்தில், கோஹினூர் வைரத்தை சுமுகமான முறையில் மீட்டுக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது. இதில் சுமுக தீர்வு உருவாகும் என்று இந்திய அரசுக்கை நம்பிக்கை உள்ளது இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.