கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவக் குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைக்காலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.
இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:
பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ’ குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.
கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.
பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.
பப்பாளியில் `பப்பைன்’ என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.
பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.