தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது கூட்டமைப்பின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
“பொது சிவில் சட்ட விவகாரம் தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் மேற்கொள்ளும் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்து அதன் பின்னால் நிற்பது என நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய சட்டக் கமிஷன் தயார் செய்த கேள்விகளை நிராகரிக்க வேண்டும் என்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முடிவினை நாங்கள் ஒருமனதாக ஆமோதிக்கிறோம்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் பொதுவான உரிமையியல் சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது, இந்திய குடிமகனின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு உரிமை பாதுகாக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. மதம் என்பது நம்பிக்கைக்கொள்வது மட்டுமல்ல. அதனை செயல்படுத்துவதற்கு தேவையான சுதந்திரத்தையும் இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள நிலையில், அதற்கு முரணான அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைச் சட்டமான 44-வது பிரிவை மட்டும் பிடித்துக்கொண்டு குரல் எழுப்புவது ஏற்புடையதல்ல. வழிகாட்டுதல் நெறிமுறைச் சட்டத்திற்காக அடிப்படை உரிமைச் சட்டத்தை புறந்தள்ளுவது என்பது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல.
பொது சிவில் சட்டம் என்பது அரசியல் சாசனச் சட்டத்தின் 44-வது பிரிவு-14 வழிக் காட்டுதல்களில் ஒன்று மட்டுமே. இதில் ஒன்று சம வேலைக்கு சம கூலி என்பதாகும். ஆனால், இந்தியாவில் அது முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. மது விலக்கு, இலவச கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு போன்றவை முக்கிய வழிகாட்டிக் கொள்கையாக அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. அதனை அமல்படுத்த எந்த மதமும் தடையாக இல்லை. அவ்வாறு இருந்தும் இந்த வழிகாட்டிக் கொள்கைகள் அமல்படுத்தப்படவேயில்லை. ஆனால், இந்த வழிகாட்டிக் கொள்கையில் உள்ள பொது சிவில் சட்டத்தை மட்டும் அரசு குறிப்பாக மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருப்பது என்பது அப்பட்டமான சிறுபான்மை விரோதப்போக்கை வெளிக்காட்டுகிறது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதால் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மனதில் தங்களின் உரிமைகளை இழந்த உணர்வை ஏற்படுத்தும், அது நாட்டில் சீரழிவுகளை ஏற்படுத்துவதோடு பிரிவினையை ஏற்படுத்த வழிவகுக்கும். இதைத்தான் பாஜக அரசு விரும்புகிறது.
இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும், குடிமக்களின் வாழ்வு வளம் பெறவும் எந்தச் சட்டம் தேவையோ அதனைக் குறித்த கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும். நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு, வறுமை ஒழிப்பு, அனைத்து மக்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுமானால் அதனை வரவேற்கலாம். ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு பல்வேறு மதங்கள், சாதிகள், இனங்கள், மொழிகளைக் கொண்ட மக்கள் வாழும் நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று முரண்டு பிடிப்பதன் பின்னணி பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்குகிறது.
ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் ஃபெடரல் கொள்கையை ஆதரிப்பவர்கள் நாம். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் இது ஆகுமென்றால் மக்கள் விஷயத்தில் மட்டும் ஏன் ஆகாது? அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இல்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை அமைப்பினர் தங்களுக்குரிய சிவில் சட்டத்தை கடைப்பிடிப்பதால் இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கோ, பாதுகாப்பிற்கோ, முன்னேற்றத்திற்கோ எந்த குந்தகமும் விளையப் போவதில்லை. இதர மதத்தினருக்கும் இதனால் எவ்வித தொந்தரவும் எழாது. ஆகவே பொது சிவில் சட்டத்திற்கான கோரிக்கை முஸ்லிம்களின் அடையாளத்தை அழிப்பதற்கும், இந்துத்துவாவின் சிந்தாந்த அடிப்படையிலான சட்டங்களை திணிப்பதற்கும் உண்டான சதித் திட்டமே.
ஆகவே, இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் தனித்தன்மையை, நம்பிக்கை சார்ந்த உரிமைகளை பாதுகாக்க, அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு ஆதரவு தெரிப்பதோடு தொடர்ந்து, முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பின்னால் நிற்பது என்றும் முடிவெடிவெடுத்துள்ளோம்.
மேலும், பொது சிவில் சட்டம் தொடர்பாக தேசிய சட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள கேள்விகளை நிராகரிப்பதோடு, பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தவும் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தவும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக தீர்மானித்துள்ளோம். அதோடு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான கோரிக்கைக்கு வலுசேர்க்கவும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக தீர்மானித்துள்ளோம்.” என்றனர்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா Ex MLA, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் சேக் முகமது அன்சாரி, தமுமுக மாநில பொது செயலாளர் பி.எஸ்.ஹமீது, இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்கின் தலைவர் அ.ச.உமர் ஃபரூக், முஸ்லிம் லீக்கின் பாத்திமா முசாபர், இந்திய தேசிய லீக்கின் தேசிய பொது செயலாளர் நிஜாமுதீன் Ex MLA, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் பொது செயலாளர் தர்வேஷ் ரஷாதி, மில்லி கவுன்சிலின் இப்னு சவூத், ஜமாத்தே இஸ்லாமியின் துணைத் தலைவர் சிராஜ், ஆல் இந்தியா தேசிய லீக்கின் இனாயத்துல்லாஹ், ஐக்கிய சமாதான பேரவை பொது செயலாளர் முஜீபுர் ரஹ்மான் பாகவி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் திருப்பூர் அல்தாஃப், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத் தலைவர் கே.ஏ.மன்சூர் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.