வெள்ளி, 9 டிசம்பர், 2016

ரூ.2000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி நீக்கம்

ரூ.2000 வரையிலான ரொக்கமற்ற டெபிட், கிரிடிட் கார்டு பணப்பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாடு மெல்ல மெல்ல சீராகி வருகிறது. இதனிடையே, பொதுமக்கள் ரொக்கமற்ற மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு மாறுமாறு பிரதமர் மோடி தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறார். மின்னணு பணப்பரிவர்த்தனை குறித்து தெரிந்தவர்கள் அதுகுறித்து தெரியாதவர்களுக்கு சொல்லித்தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, அதற்கு சேவை வரி விதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2000 வரையில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுவோருக்கு சேவை வரி விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது, கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுவோருக்கு 15 சதவிகித சேவை வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.