வெள்ளி, 9 டிசம்பர், 2016

செல்வந்தர்களிடம் கடனை வசூலிக்‌க முடியாதது ஏன்?..சிறப்பு நீதிமன்றம் கேள்வி

ஏழைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வசூல் செய்ய முடியும்போது, 100 செல்வந்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வாராக்கடனை ஏன் வசூலிக்க முடியாது ‌என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்றது தொடர்பான வழக்கு ஒன்று, சென்னை 11-வது கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே. வெங்கடசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி மேலதிகாரிகளின் செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார். கறுப்பு பணம் ஒழிப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஏழை மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும், இதனை வங்கி அதிகாரிகள்தான் செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
உயர் மதிப்பிலான நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, வாராக்கடன் விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, சுமார் 100 நபர்கள் மட்டும்தான் இந்த வாராக்கடனை அதிகளவில் வைத்துள்ளதாக கூறினார்.
ஏழைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வசூல் செய்ய முடியும்போது, 100 செல்வந்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வாராக்கடனை ஏன் வசூலிக்க முடியாது ‌என்றும் நீதிபதி வெங்கடசாமி கேள்வியெழுப்பினார்.