மனிதகுலம் சந்தித்த மோசமான பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் போபால் துயரம் நிகழ்ந்து 32 ஆண்டுகளைக் கடந்தும், அந்த சம்பவத்தின் சுவடுகள் அங்கிருந்து நீங்கவில்லை என்றே கூறலாம். போபால்
விஷவாயு கசிவு:
மத்தியப்பிரதேசத்தின் போபால் நகரில் அமெரிக்க உர நிறுவனத்துக்குச் சொந்தமான யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. 1984ம் ஆண்டில் டிசம்பர் 2ம் தேதி இரவிலும், அடுத்த நாளான டிசம்பர் 3ம் தேதி அதிகாலையிலும் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோ சயனடைடு விஷவாயு அந்த ஆலையில் இருந்து கசிந்தது. உயிருக்கு உலை வைக்கும் அந்த வாயு போபால் நகர வளிமண்டலத்தில் மெல்ல கலந்தது. பல அப்பாவிகள் தூக்கத்திலேயே அந்த வாயுவை சுவாசித்து உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் இந்த கோரம் நிகழ்ந்ததால் தப்ப வழியில்லாமல் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அரசின் அதிகாரப்பூர்வ குறிப்புகளிலிருந்தது மட்டுமே, உண்மையில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்கிறார்கள் சமூக உரிமை ஆர்வலர்கள். மேலும், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.
வழக்கு விசாரணை:
உலகின் மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த விபத்து தொடர்பாக யூனியர் கார்பைடு நிறுவன அதிபரும், தலைமை செயலதிகாரியுமான வாரென் ஆண்டர்சனை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணையின்போது ஜாமீன் பெற்று அமெரிக்கா சென்ற ஆண்டர்சன், கடந்த செப்டம்பரில் இறக்கும் வரையில் இந்தியா பக்கம் தலைகாட்டவே இல்லை.
தீராத சோகம்:
யூனியன் கார்பைடு ஆலை ஏற்படுத்திய தீராத வடு போபால் மண்ணையும், நிலத்தடி நீரையும் இன்றும் விட்டுவைக்கவில்லை. விபத்து நடந்த யூனியன் கார்பைடு ஆலையில் விபத்து நடந்து 32 ஆண்டுகளாகியும், அங்கிருந்து நச்சுக் கழிவுகள் நீக்கப்படவில்லை என்பதே நிதர்சனம். விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டுவரும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர் அப்துல் ஜப்பார், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விடுத்து, இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும் நீதியும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். போபாலில் 14 ஆண்டுகள் இயங்கிய யூனியன் கார்பைடு நிறுவனம், தொழிற்சாலை வளாகத்தில் 11 லட்சம் டன் நச்சுக் கழிவுகளை நிலத்தில் புதைத்துள்ளதாகவும், அந்த தொழிற்சாலையைச் சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் 340 டன் நச்சுக் கழிவுகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பவம் நடந்து 32 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீடு வழங்கக் கோரி போராட்டமும், கோர விபத்தின் 32ம் ஆண்டு நினைவு தினத்தையும் போபால் மக்கள் இன்று ஒரு சேர அனுசரித்தனர்.
|