ஞாயிறு, 16 ஜூன், 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது - மம்தா பானர்ஜி June 16, 2019


Image
மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது என, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி  தெரிவித்துள்ளார். 
நோயாளி ஒருவர் உயிரிழந்தததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர்களை தாக்கியுள்ளனர். மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, மேற்குவங்கத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டம் இன்றுடன் 6-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால், சுகாதாரப்பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றார்.மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாகவும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், மம்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களை பாதுகாக்க, சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் எழுதி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள்  அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், பல்வேறு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவர்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களிலும் சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.