ஞாயிறு, 16 ஜூன், 2019

காந்தி - கோட்சே குறித்த பேச்சு ; விசிக தலைவர் திருமா மீது வழக்குப்பதிவு! June 16, 2019

Image
காந்தி ஓர் இந்து தீவிரவாதி எனவும் ; கோட்சே ஓர் இந்து பயங்கரவாதி எனவும் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன், கடந்த மே மாதம் 18 ஆம் தேதி சென்னை, அசோக் நகரிலுள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். 
அப்போது, காந்தி ஓர் இந்து தீவிரவாதி எனவும், கோட்சே ஓர் இந்து பயங்கரவாதி எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தார் திருமாவளவன். இதற்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்து மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் காவல் நிலையத்தில், திருமாவளவன் மீது இரு பிரிவினரிடையே அமைதியை குலைப்பது, உள்நோக்கத்தோடு தகவல்களை பரப்புதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தல் சமயத்தில் கோட்சே குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் தெரிவித்திருந்த கருத்துக்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.