ஞாயிறு, 16 ஜூன், 2019

அவசரச் சட்டத்தை கொண்டுவந்து ராமர் கோவிலை கட்டுவோம்: உத்தவ் தாக்கரே சூளுரை! June 16, 2019

Image
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அவசரச் சட்டத்தினை கொண்டு வந்து ராமர் கோவிலை கட்டியெழுப்புவோம் என தெரிவித்துள்ளார் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே.
சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட அவரது கட்சியின் 18 எம்.பிக்கள் நேற்றைய தினம் அயோத்திக்கு வருகை புரிந்திருந்த நிலையில், இன்று அவர்கள் அயோத்தியிலுள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, "அயோத்தி விவகாரம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே, ராமர் கோவிலை கட்டுவதற்கான அவசர சட்டத்தினை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அதைக் கொண்டுவருவதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு இருக்கிறது" என தெரிவித்தார்.
மேலும், ராமர் கோவிலுக்காக அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டுமென மத்திய அரசு முடிவு செய்துவிட்டால் அதனை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள இந்து மக்கள் அனைவரும் உங்களுக்கு துணையிருப்பார்கள் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தல் சமயத்திலும், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சமயத்திலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் முன் வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் ராமர் கோவில் விவகாரம் முக்கியமானதொன்று என்பது குறிப்பிடத்தக்கது.