மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி வரும் வேளையில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நடைபெறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மின்னணு மோசடியில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்..
அறிவியல் வளர்ச்சியின் பயனாக உலகமே தொழில்நுட்ப மயமாக மாறி வருகிறது. நேரத்தையும் மிச்சப்படுத்தி, வேலையை சுலபமாக்கும் பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பங்கள் நமக்கு பயணை தந்தாலும், அதனூடாக சில மோசடி சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில், வங்கி ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை பயன்படுத்தி நடைபெறும் மோசடி சமீபமாக அதிகரித்து வருகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி எனக் கூறி, ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை தெரிந்து கொள்ளும் நபர்கள், சில நிமிடங்களில் அவர்களின் கணக்குகளில் உள்ள பணத்தை தொழில்நுட்ப ரீதியில் திருடி விடுகிறார்கள்.
இதனிடையே, தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இது போன்ற ஆன்லைன் பண மோசடியில் ஈடுபடுவர்களை கண்டுபிடிப்பது எளிதல்ல என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள மக்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களையோ அல்லது ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பேங்கிங் விவரங்களையோ எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என வங்கி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க இணையதள குற்றத்தடுப்புப் பிரிவு மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற மோசடிகளை தடுப்பதற்கு, ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணின் முக்கியத்துவம் தொடர்பாக, வங்கிகள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இணையதள மோசடிகள் நிகழாமல் தடுக்க முடியம் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை நோக்கிச் செல்ல மக்கள் வலியுறுத்தப்பட்டு வரும் இந்த காலக்கட்டத்தில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு சலுகைகள் வழங்குவதை விட, அதில் நடைபெறும் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பதிவு செய்த நாள் : December 17, 2016 - 07:40 AM