நாடாளுமன்ற கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கி, மக்களின் வரிப் பணம் வீணாகியிருக்கிறது.
ஜனநாயகத்தில் நாடாளுமன்றமே அதிகபட்ச கவுரவமிக்கது. நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மரியாதை அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற அரசு முயற்சிக்க வேண்டும். ஆனால், அவர்கள் இதை பெரிதாகக் கருதவில்லை. அதனால், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நடவடிக்கைகள் ஏதும் நடக்காமல், சுமுகமானதாக இல்லாமல் முடிந்திருக்கிறது
நாடாளுமன்ற இரு அவைகள் நடக்க ஒரு நிமிடத்துக்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவு என 2012ல் அரசு தெரிவித்தது. அப்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சால் அவையில் வெளியிட்ட தகவல் இது. 2 அவைகள் முழுநேரம் நடக்க 10 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், ஆண்டுக்கு 100 நாட்கள் கூட்டத் தொடர் நடத்துவது மத்திய அரசின் திட்டம். அதன்படி, மத்திய பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுவது வழக்கம். குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை திட்டமிடப்பட்டது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களாக 10 நாட்கள் நாடாளுமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டது. மீதமுள்ள 21 நாட்களில் இரண்டு அவைகளும் முடங்கியதில், சுமார் 200 கோடி ரூபாய் வீணாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நேரத்தைப் பொருத்தவரை, மக்களவையின் 85 சதவிகித நேரம், அதாவது 92 மணி நேரம் வீணாகியுள்ளது. மாநிலங்களவையில் இது 81 சதவிகிதமும் 86 மணி நேரமும் ஆகும். ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடங்கியது. 2010ஆம் ஆண்டில் அதிகபட்சமாக மக்களவை 94 சதவிகிதமும், மாநிலங்களவை 98 சதவிகிதமும் முடங்கியது. அப்போது 2ஜி முறைகேடு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் அமளியால் கூட்டத் தொடர் முடங்கியது.
குளிர்கால கூட்டத் தொடரில் சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் மாநில இழப்பீடுக்கான ஜிஎஸ்டி மசோதாக்கள் அறிமுகமாக இருந்தன. மேலும், தகவல் தொழில்நுட்ப மசோதா, வாடகைத்தாய் மசோதா, விவகாரத்து திருத்த மசோதா ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட இருந்தன. புள்ளிவிவர சேகரிப்பு மசோதா, பழங்குடியின திருத்த மசோதா, கடல்சார் இழப்பீடு மசோதா ஆகியவையும் கொண்டு வரப்பட இருந்தன, ஆனால், தோல்வியே மிஞ்சியது. மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு திருத்த மசோதா மட்டுமே இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறியது, ஆறுதலாக அமைந்தது.
ஏற்கனவே அறிமுகமாகி நிறைவேறாத 10 மசோதாக்களும் உள்ளன. நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, எய்ட்ஸ் தடுப்பு திருத்த மசோதா, மனநல கவனிப்பு மசோதா ஆகியவை அவற்றில் முக்கியமானவை. தொழிலாளர் இழப்பீடு திருத்த மசோதா, தொழிற்சாலை திருத்த மசோதா, பேறுகால விடுப்பு திருத்த மசோதா ஆகியவையும் நிறைவேறவில்லை. குடிமக்கள் திருத்த மசோதா, எதிரிகள் சொத்து திருத்த மசோதா, ஊழல் தடுப்பு திருத்த மசோதா, ஊழலை வெளிப்படுத்துவோர் பாதுகாப்பு மசோதா ஆகியவையும் நிலுவையில் நீடிக்கும் நிலை தொடர்கிறது.