திங்கள், 26 டிசம்பர், 2016

செக் பவுன்ஸ் ஆனா ரெண்டு வருஷம் ஜெயில் : கடுப்பேத்தும் மோடி அரசின் புதிய சட்டம்!


குறைந்த பணப் பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியாக, காசோலைகள்(செக்) வங்கியில் பணம் இன்றி திரும்ப வரும், செக் மோசடிக்கு தண்டனையை கடுமையாக்க சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ ஒருவர் செக் அளித்து, அது வங்கியில் பணம் இன்றி திரும்ப வரும் போது, செக் மோசடியின் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறையும், செக் மோசடியில் குறிப்பிடப்பட்டுள்ள  பணத்தைக் காட்டிலும் இரு மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டம் தற்போது இருக்கிறது.
ஆனால், செக் மோசடி வழக்கு தொடரும்போது, பாதிக்கப்பட்டவர் வழக்கு முடிந்து பணம் அல்லது இழப்பீடு பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. தற்போது நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் மட்டும் ஏறக்குறைய 18 லட்சம் செக் மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
மேலும், வர்த்தகர்களும் செக் மோசடி அச்சம் காரணமாக காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய  பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். மேலும், செக் மோசடி குறித்த கவலைகளையும் பாரதிய ஜனதா ஆதரவு வர்த்தகர்கள் சங்கம் அரசுக்கு தெரிவித்து வந்தனர்.
ஆதலால், செக் மோசடிகளுக்கான வழக்குகளை விரைவாக முடிக்கவும், தண்டனையை கடுமையாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, புதிய திருத்தத்தில், செக் மோசடியில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக பணத்தை திருப்பித்தர ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதில் அவர் தவறை உணர்ந்து பணத்தை திரும்ப அளித்தால், அல்லது இரு தரப்பினரும் சமாதானமாச் சென்றால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் நடவடிக்கை கடுமையாக்கி மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யவும் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
 செல்லாத ரூபாய் அறிவிப்புக்கு பின் மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற்ற, பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஆதலால், செக்மோசடிக்கான தண்டனையை கடுமையாக்கும் போது, மோசடிகள் குறைந்து, பணமில்லா பரிமாற்றம் அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.
source http://kaalaimalar.net/punishment-for-check-fraud/