தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில், கட்சியின் சட்டமன்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்வில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பதவியேற்புக்கு முன்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பதிவு செய்த நாள் : December 06, 2016 - 01:24 AM