நியூஸ் 18 ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை இந்தியாவே ரோல் மாடலாக பார்க்கக் கூடிய குஜராத்தை விட தமிழகம் பல துறைகளில் முன்னேறிய மாநிலம் என்பதை காட்டுகிறது. பொருளாதார சீர்திருத்தங்களை தழுவிக்கொள்வதிலும், அல்லது வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்வதிலும் தமிழகம், குஜராத்தும் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்றன.
ஆனால் இதனால் கிடைக்கும் பலன் இரண்டு மாநிலங்களுக்கும் வேறுபடுகிறது. ஏழ்மையை ஒழிப்பதிலும், சுகாதார திட்டங்களை நடைமுறைபடுத்துவதிலும், கல்வி அறிவை மேம்படுத்துவதிலும், குஜராத்தை விட தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள சமூக நல திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றது தான். பொது விநியோக முறை (ரேசன் கடைகள்), பொது சுகாதார கட்டமைப்புகளை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியானது, சுகாதாரத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி, கல்வி, ஊட்டச்சத்து ஆகியவற்றுடன் ஒன்று சேர்ந்து இருப்பதாக எக்கனாமிக் மற்றும் போலிட்டிகள் வீக்லியில் பத்திரிக்கையாளர் கலையரசன் எழுதியுள்ளார். இந்த திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொருளாதா வளர்ச்சியை 1991 மற்றும் 2012 ஆம் ஆண்டு இரு மாநிலங்கள் இடையே தோரயமாக ஒப்பிட்டால், தமிழகத்தின் வளர்ச்சி ஆண்டிற்கு 7 சதவீதமாக விரிவடையும் நிலையில் குஜராத்தின் வளர்ச்சி 8.3 சதவீதமாக உள்ளது.
அதே நேரம் லோயர் குரோத் ரேட் எனப்படும், ஏழ்மை ஒழிப்பில் தமிழகம் குஜராத்தைவிட பல மடங்கு முன்னேறி வருகிறது. 1990களில் தமிழகத்தில் ஏழ்மை என்பது குஜராத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. 1993 மற்றும் 94 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஏழைகளின் சதவீதம் 51.2 சதவீதமாக இருந்தபோது, குஜராத்தில் அது 43.3 சதவீதமாக இருந்தது. அதே நேரம் 2011 – 12 காலகட்டத்தில் தமிழகத்தில் இது 34 சதவீதம் குறைந்து, 15.8 சதவீதமாக ஆனது. அதே குஜராத்தில் 22 சதவீதம் மட்டுமே குறைந்து 21.5 சதவீதத்தில் நீடித்தது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் இந்த பலனை அனைத்து மதத்தினர் மற்றும் சமூகத்தினர் சமமாக அனுபவித்தனர்.
ஆனால் குஜராத்தில் அப்படி இல்லை. அதே நேரம் கிராமம் மற்றும் நகரங்கள் இடையேயான சமநிலையை ஏற்படுத்துவதில் தமிழகத்தை விட குஜராத் முன்னிலையில் இருக்கிறது. அதாவது குஜராத் கிராமங்கள் வேகமாக நகர்மயமாகி வருகின்றன. ஆனால் கல்வித்துறையில் குஜராத்தை தோற்கடிக்கிறது தமிழகம். 1993-94 ஆம் ஆண்டில் தமிழகத்தின் எழுத்தறிவு வீதம் 67 சதவீதத்தில் இருந்த 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் குஜராத்தில் அது 64.6 சதவீதத்தில் இருந்து 77.9 சதவீதமாக மட்டுமே உயர்ந்தது.
குறிப்பாக தாழ்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் எழுத்தறிவு வீதம் தமிழகத்தில் 23 சதவீதம் அதிகரித்த நிலையில் குஜராத்தில் அது 15 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. சுகாதாரத்துறையிலும் தமிழகமே முன்னிலை வகிக்கிறது குஜராத்தை விட. தமிழகத்தில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 22 குழந்தைகள் இறக்கின்றன.
இது குஜராத்தில் 41 ஆக உள்ளது. பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகள் தமிழகத்தில் ஆயிரத்திற்கு 97 ஆகவும், இது குஜராத்தில் 148 ஆக உள்ளது. குழந்தைகள் நோய் தடுப்பு மருந்துகள் வழங்குவதில் தமிழகம் 80.9 சதவீதமும், குஜராத் 45.2 சதவீதமுமாக உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை தமிழகத்தில் 31.1 சதவீதமாகவும் குஜராத்தில் 51.7 சதவீதமாகவும் உள்ளது.