என் மாநில அதிகாரிகளை தொட்டுப் பாருங்கள் பார்க்கலாம்’
பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா சவால்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ‘என் மாநில அதிகாரிகள் மீது கை வையுங்கள் பார்க்கலாம். துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வீடு, தலைமைச் செயலகத்தில் அவர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதற்கு எதிராக முதன்முதலாக குரல் கொடுத்த மம்தா பானர்ஜி, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்காள மாநிலம், கோலாகாட் நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
ஆயிரம் முறை
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு என்பது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலில் என்னவிதமான ஒப்பந்தம், யார் யாருக்கு பங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.இதை நீங்கள் கூறாவிட்டால், நாங்கள் இதை ஆயிரம் முறை கூறுவோம்.
தொட்டுப்பாருங்கள்
மாநில அரசுக்கு சரியான தலைமை இல்லாவிட்டால், மத்திய அரசு அதன் அதிகாரிகளை கைது செய்து மிரட்டல் விடுக்கிறது. பிரதமர் மோடி உங்களுக்கு துணிச்சல் இருந்தால், எங்கள் மாநில அதிகாரிகளை தொட்டுப் பாருங்கள். மத்திய அரசு அதிகாரிகள் யாரும் மாநிலத்தை விட்டு போக முடியாது. மத்திய அரசுக்கு ஒரு சட்டம் இருக்கும்போது, மாநில அரசின் கைகளிலும் தனிச்சட்டம் இருக்கிறது.
துணிச்சல் இருக்கிறதா?
உங்களால் எந்த அதிகாரி மீது கை வைக்க முடியாது. வேண்டுமானால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்யுங்கள். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு துணிச்சல் இருந்தால், என்னையும், எங்கள் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்யுங்கள்.
ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம். இந்த போராட்டத்தில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். நான் உயிரோடு இருக்கும் வரை, தேவைப்பட்டால் நான் தனியாக போராடுவேன்.
அழிக்கிறார்கள்
பிரதமர் மோடியும், பா.ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவும் நாட்டையும், ஜனநாயகத்தையும் வகுப்பு வாதம், பழிவாங்கும் அரசியல், மக்கள் விரோத கொள்கைகள் மூலம் அழிக்கிறார்கள்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஏழை, நடுத்தர மக்களை மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கிவிட்டது. அவர்களின் வாழ்வாதாரத்தை மோசமாக்கி விட்டது. மக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணத்தை எடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.