வெள்ளி, 27 ஜனவரி, 2017

விமானத்தை காட்டிலும் வேகம்… 20 நிமிடத்தில் சென்னை டூ பெங்களூர்…!!! இந்தியாவில் “ஹைப்பர் லூப்” ரயில்! வீடியோ


விமானத்தைக் காட்டிலும் வேகம், மணிக்கு 1200 கி.மீ. செல்லும் ரெயில் இந்தியாவில் சாத்தியமாகப் போகிறது என்றால் நம்பமுடிகிறதா?
ஆமாம், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வெறும் 20 நிமிடங்களில் போகலாம்; டெல்லியில் இருந்து மும்பைக்கு 70 நிமிடங்களில் செல்லலாம்.
 வீடியோ கேம் விளையாட்டிலோ, கற்பனைக் கதைகளில்தான் சாத்தியம் என்று நினைக்க வேண்டாம். 
அமெரிக்காவைச் சேர்ந்த எலோன் மஸ்க் என்பவர் உருவாக்கிய ‘ஹைப்பர்லூப் ரெயில்’ மூலம் தான் நாம் இனி வருங்காலத்தில் பயணிக்க போகிறோம்.
கான்க்ரீட் தூண்கள் அமைத்து, அதன் மீது  இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு, ஹைப்பர் லூப் ரெயில் போக்குவரத்து இயக்கப்படும். ஏறக்குறைய காற்றின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகமாக செல்லும், இல்லை.. இல்லை.. பறக்கப்போகிறது இந்த ரெயில்.
சமீபத்தில் எலான் மஸ்க்கின் நிறுவனம் இந்தியாவில் தாங்கள் செயல்படுத்த விருப்பமுள்ள வழித்தடங்கள் குறித்து மத்திய அரசுக்கு  டுவிட் செய்தது. அதில் குறிப்பாக சென்னை- பெங்களூரு, சென்னை- மும்பை, பெங்களூரு- திருவனந்தபுரம் , மும்பை-டெல்லி ஆகிய வழித்தடங்களை குறிப்பிட்டு இருந்தது.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தையும் கடிதம் மூலம் இந்த நிறுவனம் அனுகி இருந்தது. இதற்கு மத்தியஅரசு தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டு,  பேச்சு நடத்த அழைக்கப்பட்டது.   
இதையடுத்து,  கடந்த புதன்கிழமை ஹைபர் லூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் இயர்லி, டெல்லி விரைந்து , மத்தியஅரசின் அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த பேச்சின் போது, நாட்டில் எந்தெந்த நகரங்களுக்கு இடையே ஹைப்பர் லூப் ரெயிலை இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹைப்பர் லூப் ரெயில் நிறுவனத்தின் தலைமைநிர்வாக அதிகாரி நிக் இயர்லி கூறுகையில்,  ” இந்தியாவில் எங்களின் “ஹைப்பர் லூப் ரெயில்” இயக்குவது குறித்து அரசிடம் பேச்சு நடத்தினோம். ஆனால், இந்தியாவில் மிகவும் எளிதாக இந்த திட்டத்தை செயல்படுத்திவிட முடியாது.
அதிகமான பாதுகாப்பு தரச்சான்றிதழ்களை பெற வேண்டும். இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துதல் மிக முக்கியப் பிரச்சினை. அதை செய்வது மிகக் கடினமானது. இதன்காரணமாகவே இந்தியாவில் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 
எங்களின் முதல் ஹைப்பர் லூப் ரெயில் , அமெரிக்காவின் நிவேதா மாநிலத்தில் அடுத்த 2 மாதத்தில் செயல்பாட்டு வரும். இந்தியாவில் மட்டும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், விமான டிக்கெட்டுகள், ராஜ்தானி ரெயில் டிக்கெட்டுகள் கட்டணத்தைக் காட்டிலும் குறைந்த விலையில், மக்கள் நகரங்களுக்கு இடையே பயணிக்கலாம்.  
ஆம், இந்த ஹைப்பர் லூப் ரெயில் என்பது உயர்தர வகுப்பினருக்கானது இல்லை. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் ” என்று தெரிவித்தார்
கட்டுமானச் செலவைக் குறைக்கும் வகையில் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதில் பைபர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதில் ரெயில்கள் செல்லும். இந்த ரெயிலை இயக்குவதற்காக குழாய்களின் மீது சோலார்தகடுகளும், ரெயில் செல்லும் பாதைகளில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்படும். காந்த விசை மூலம் இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 1200 மைல் வேகத்தில் இயக்க முடியும்.