மத்திய பிரதேசத்தில் அரசு வங்கி ஏடிஎம்மில் ஒரு பக்கம் அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டம் சிகான் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த் சோனி. தனியார் கம்பெனி ஊழியர். ஹேமந்த் சோனி, நேற்று பண தேவைக்காக, பல இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு சென்றார். ஆனால், எங்கும் பணம் இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, அதே பகுதியில் உள்ள அரசு வங்கி ஏடிஎம் மையத்துக்கு சென்றார். ஏடிஎம் மையம் திறந்து இருந்ததுடன், பணம் இருப்பதை அறிந்ததும், மகிழ்ச்சியடைந்தார். உடனே, தனது கணக்கில் ரூ.4,000 எடுத்தார். 500 ரூபாயாக 8 நோட்டுகள் வந்த்து.
அந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து எண்ணும்போது, அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். அந்த ரூபாய் நோட்டுகளில், 2 தாள்களில் ஒரு பக்கம் மட்டுமே அச்சடிக்கப்பட்டு இருந்தது. மறுபக்கம் வெற்றுத்தாளாக இருந்தது.
இதையடுத்து ஹேமந்த் சோனி, சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் செய்தார். வங்கி அதிகாரிகள் ஒரு பக்கம் அச்சடிக்காமல் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி கொண்டு, அதற்கு பதிலாக வேறு நோட்டுகளை மாற்றி கொடுத்தனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த பணம் முழுவதும் ரிசர்வ் வங்கியில் இருந்து கொடுக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில், ஏடிஎம் மெஷினில் பணத்தை வைக்கும்போது, கண்காணித்து செய்கிறோம் என்றார்.
அவசர கதியில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதால் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. ஏற்கனவே 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். இதில், தவறாக அச்சடிக்கப்பட்ட நோட்டுகளை, சமானிய மக்கள் கொண்டு சென்றால், அவர்களுக்கு கடும் சிரமம் ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை கவனித்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில், விவசாயி ஒருவருக்கு வங்கியில் வழங்கப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவம் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.