செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்..... என்ன செய்கிறது தமிழக அரசு?

ஜல்லிக்கட்டு பிரச்னை மாநில உரிமைக்கு அப்பாற்பட்டு, உச்சநீதிமன்றத்தின் கையில் சிக்கிக் கொண்டது.
மாநில அரசு இதில் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த 11ம் தேதியன்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கண்டிப்பாக நடைபெறும் என்று அதிரடியாக அறிவித்தார்.
அன்று அவர் வெளியிட்ட ஐந்து பக்க அறிக்கையில், தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு பற்றியெல்லாம் விரிவாக விளக்கி, ஜல்லிக்கட்டுப் போட்டி நிச்சயம் நடக்கும் என உறுதியளித்தார்.ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமாக தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.12ம் தேதியன்று இந்த வழக்கில் உடனடியாகத் தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.
இதனிடையே கிருஷ்ணா நதி நீர் தொடர்பாக ஆந்திர முதலமைச்சரை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர், ஜல்லிக்கட்டு பற்றி கருத்துத் தெரிவித்த போது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்றும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் சாதகமான பதில் வரவில்லை” என்றார்.அதன்பிறகு நிலைமை உச்சகட்டத்தை எட்டியது. ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகள் மட்டுமல்லாமல், அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் என்று ஆங்காங்கே அறிவிப்புகள் வந்தன.
அலங்காநல்லூர் பகுதியில் இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு அதிகாரப்பூர்வமாக அல்லாமல் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு நடைபெற்றது.தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டைக் கட்டுப்படுத்த ஒரு சில இடங்களில் சிறு கைதுகளும் தடியடியும் காளைகளை ஓட்டிச் செல்வதும் என போலீஸ் நடவடிக்கை எடுத்தது.
நேற்றிலிருந்து (16ம் தேதி) தொடர்ந்து அலங்காநல்லூரில் நடைபெறும் போராட்டத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 38 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு குடிநீரும் உணவும் கொடுக்கக் கூட போலீசார் அனுமதிக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். காவல்துறையினர் தொடர்ந்து போராட்டம் நடத்தும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.