ஓட்டலில் ஏ.சி. யில் அமர்ந்து சாப்பிடுவது, சினிமா பார்ப்பது, விமானப் பயணம், செல்போன் கட்டணம், என அனைத்தும் இனி காஸ்ட்லி ஆகப் போகிறது.
இப்போது 15 சதவீதம் நடைமுறையில் இருக்கும் சேவை வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பட்ஜெட்டில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
ஏப்ரல் 1-ந்தேதி சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைக்கு கொண்டு வர மத்தியஅரசு திட்டமிட்டு இருந்தது.
ஆனால், மாநில அரசுகள் சில விஷயங்களில் பிடிவாதத்துடன் இருந்ததால், ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே அடுத்த 3 மாத இடைவெளியில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய சேவை வரியை உயர்த்த மத்தியஅரசு முடிவு செய்து, நிதி அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
அதன்படி, வரும் பட்ஜெட்டில் சேவை வரி, ஒரு சதவீதம் வரை உயர்த்தப்பட்டு 16 சதவீதமாக அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2015-16ம் நிதியாண்டில் 12.38 சதவீதம் இருந்த சேவை வரியில்,
ஸ்வாச் பாரத் செஸ், கிரிஷி கல்யான் செஸ் என்ற இரு வரிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, அது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தைச் சுட்டிக்காட்டி, சேவை வரியை 1 சதவீதம் வரை மத்தியஅரசு பட்ஜெட்டில் உயர்த்தும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
சேவை வரி ஒரு சதவீதம் உயர்த்தப்படும் போது, ஓட்டலில் ஏ.சி. யில் அமர்ந்து சாப்பிடுவது, செல்போன் பில் கட்டணம் செலுத்துவது, விமானப்பயணம், திரையரங்குகளி்ல் சினிமா பார்ப்பது என அனைத்தின் கட்டணமும் உயரும்