தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், மத்தியில் அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவும் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் இரவு பகலாக வலுத்துவருகிறது.
குறிப்பாக மதுரை அலங்காநல்லூர் மற்றும் சென்னை மெரீனா கடற்கரையிலும் கடந்த 3 நாட்களாக கல்லூரி மாணவர்களும், ஐடி ஊழியர்களும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். சில கல்லூரி நிர்வாகங்களும், ஐடி நிறுவனங்களும் தானாகவே முன்வந்து மாணவர்களையும் ஊழியர்களையும் போராட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, மாணவர்களின் உணர்வை மதிக்கும் வகையில் சென்னையில் 31 கல்லூரிகள் இன்று முதல் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பால் சென்னை மெரீனா போராட்டத்தில் கலந்துகொள்ள மேலும் 2 மடங்கு மாணவர்கள் இன்று குவிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடற்கரை பகுதியில் பல லட்சம் மாணவர்கள் குவிவதால், இன்று சென்னையே ஸ்தம்பிக்கவும் வாய்ப்புள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
இதனையடுத்துவரும் சாதகமான அறிவிப்பை பொருத்தே மாணவர்களின் போராட்டம் வலுக்கவோ அல்லது வேறு விதமான போராட்ட நிலைமைக்கு தள்ளவோ வழிவகை ஏற்படும்.