குளிர் காலம் வந்துவிட்டாலே சருமம் மற்றும் கூந்தல் சார்ந்த பிரச்னைகளும் சேர்ந்தே வந்து விடும். மலசேஷ்யா எனும் தொற்று, மனிதர்களின் தலையில் வேகமாக பரவுகிறது.
மலசேஷ்யா தொற்றுக்கு தீர்வு என்ன? அழகுக்கு அழகு என்ற வார்த்தை எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ தலைமுடி உள்ளவர்களுக்கு நிச்சயம் பொருந்தும். ஒருவரின் முகத்தை மிக அழகாக காட்டுவதில் தலைமுடி தலையாய பங்கு உண்டு. குளிர் காலத்தில் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு, தலையில் மலசேஷ்யா என்ற பூஞ்சை தொற்றும் உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முகம், மார்பு, முதுகு ஆகிய உடலின் பிற பாகங்களுக்கும் பூஞ்சைத் தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக 30 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் என்றாலும், பிறந்த குழந்தைக்கு கூட பரவும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனர் மருத்துவர்கள். வெள்ளை நிறத்தில் தலைகளில் படர்ந்திருக்கும் பூஞ்சைகளால் முடி உதிரும் பிரச்சனை அதிகம் இல்லை என்றாலும், முடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குறைபட்டுக் கொள்வதாக அழகுக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரி. இதற்கு தீர்வுதான் என்ன. வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், மற்றவர்களின் சீப்பை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது, அடிக்கடி ஷாம்பூவை மாற்றக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர். இந்த நோய் குறித்த அறிகுறி தென்பட்டால் தொடக்கத்திலேயே முறையான சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பதிவு செய்த நாள் : January 08, 2017 - 01:59