சனி, 14 ஜனவரி, 2017

தமிழக அரசை “டிஸ்மிஸ்” செய்ய தயாராகும் மத்திய அரசு!? காரணத்தை தேடுகிறது

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக ஆட்சி நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு இப்போது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்ததாக கூறி ஆட்சியை கலைப்போம் எனவும் மிரட்டல் விடுக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி நிர்வாகத்தில் பாஜக தலையிட்டு வருகிறது. ஜெயலலிதா எதிர்த்த உதய் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு தமிழகம் ஒப்புதல் தந்தாக வேண்டிய நெருக்கடியை மத்திய அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழகமே ஒன்று திரண்டு போராடிக் கொண்டிருப்பதை பற்றி கவலைப்படவில்லை மத்திய பாஜக அரசு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையும் பொருட்படுத்தவில்லை மத்திய அரசு. இப்போது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்தை கொண்டுவர தமிழக மக்கள் வலியுறுத்துகின்றனர். இதைபற்றியும் கவனத்தில் கொள்ளவில்லை மத்திய அரசு. ஆனால் சுப்பிரமணியன் சுவாமி போன்ற பூனைக் குட்டிகளை விட்டு தமிழக அரசை மிரட்டுவதாக ‘ஆழம்’ பார்க்கிறது மத்திய பாஜக அரசு.
இதே சுப்பிரமணியன் சுவாமி தம்மை ஜல்லிக்கட்டு ஆதரவாளர் எனவும் காட்டிக் கொண்டவர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசை கலைக்க திராணியற்றது மத்திய பாஜக அரசு. அங்கு போய்தான் சுப்பிரமணியன் சுவாமிகள் பூச்சாண்டி காட்ட வேண்டுமே தவிர உரிமைக்கு போராடும் தமிழ் மண்ணில் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றிய கதையை இங்கேயும் அரங்கேற்றலாம் என பாஜக காத்திருப்பதைத்தான் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அறிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.