தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி அசோக்குமாருக்கு, பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பீட்டாவின் இந்த கடிதம், தமிழக அரசை அதிர வைத்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவில்லை. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த அனுமதி கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ, ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பது நிச்சயம் என்று அறிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சித் தலைவர்களும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கூடாது என்று பிரதமர் மோடிக்கும், இந்த அவசர சட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இதனிடையே, ஜல்லிக்கட்டுத் தொடர்பாக பீட்டா இந்தியாவின் செயல் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் மற்றும் டிஜிபி அசோக்குமார் ஆகியோருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு முழுமையாக தடை விதித்து அமல்படுத்த வேண்டும். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடுத்துபவர்களை கைது செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசு ஜல்லிக்கட்டை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், டிஜிபி அசோக்குமார் என்று இருக்கிறது. தற்போது தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் இருக்கிறார். டிஜிபி அசோக்குமார் கடந்தாண்டு ஓய்வு பெற்று விட்டார். டிஜிபி அசோக்குமார் என்று கடிதம் அனுப்பியுள்ளது வியப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பீட்டா அமைப்பிடம் கேட்டபோது, இந்த கடிதம் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இதனால், அவர்கள் தவறுதலாக தமிழக டிஜிபி பெயரை குறிப்பிட்டுள்ளனர்" என்றனர். இதையடுத்து, பீட்டாவின் தலைமை செயல் அலுவலர் பூர்வா ஜோஷிபுராவின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
தமிழக டிஜிபி யார் என்று கூட தெரியாத பீட்டா அமைப்புக்கு, தமிழக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோருவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது..
http://www.vikatan.com/news/india/77740-peta-wrongly-mentions-former-dgp-ashok-kumars-name-instead-of-dgp-rajendrans-name-in-letter.art